ஏழு குண்டுகள் துளைத்தும் மரணத்தைத் தழுவாதவர்... இந்திய ராணுவத்தைக் கட்டமைத்த தீரர்! சாம் மானக்‌ஷா பிறந்ததினப் பகிர்வு | Things You Did Not Know About Sam Manekshaw

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (03/04/2018)

கடைசி தொடர்பு:18:34 (03/04/2018)

ஏழு குண்டுகள் துளைத்தும் மரணத்தைத் தழுவாதவர்... இந்திய ராணுவத்தைக் கட்டமைத்த தீரர்! சாம் மானக்‌ஷா பிறந்ததினப் பகிர்வு

சாம் மானக்‌ஷாவுக்கு போன் செய்த இந்திரா காந்தி, `ஜெனரல், ஆர் யூ ரெடி?' என்று கேட்க,  `நான் எப்போதோ தயாராகிவிட்டேன்' என்று அடுத்த விநாடி பதில் வந்தது. பாகிஸ்தான் கதையை ஒரே வாரத்தில் முடிக்க, `வங்கதேசம்' என்ற புதிய நாடு பிறந்தது. 

ஏழு குண்டுகள் துளைத்தும் மரணத்தைத் தழுவாதவர்... இந்திய ராணுவத்தைக் கட்டமைத்த தீரர்! சாம் மானக்‌ஷா பிறந்ததினப் பகிர்வு

துணிச்சல்மிக்க நடவடிக்கைகளால் உலகமே கண்டு வியந்த பெண்மணி, இந்திரா காந்தி. அவரை `ஸ்வீட்டி' என்று ஒருவர் உரிமையுடன் அழைப்பார் என்றால், அவர்தான் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சாம் மானக்‌ஷா. தரைப்படையின் உயர்ந்த பதவி, ஜெனரல். அதற்கும் மேலானது ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்து. அதைப் பெறுபவர்கள், இறக்கும் வரை அதே அதிகாரத்துடன் இருப்பார்கள். இந்திய ராணுவத்தில் `ஃபீல்டு மார்ஷல்' அந்தஸ்து பெற்றவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர், சாம் மானக்‌ஷா. மற்றொருவர் ஜெனரல் கரியப்பா. விமானப்படையில் ஃபீல்டு மார்ஷலுக்கு இணையான `marshal of the air force' அந்தஸ்தை அர்ஜான் சிங் பெற்றுள்ளார். கடற்படையில் யாருக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்திய ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை முதன்முதலில் பெற்றவர் சாம் மானக்‌ஷா.

ஃபீல்டு மார்ஷல் சாம் மானக் ஷா

அமிர்தசரஸில் பார்சி இனத்தில் பிறந்த சாம் மானக்‌ஷா, மருத்துவம் படிக்க லண்டன் செல்ல விரும்பினார். அதற்கு அவரின் தந்தை அனுமதிக்கவில்லை. திசை மாறி ராணுவத்துக்கு வந்த சாம் மானக்‌ஷா, தன் வாழ்நாளில் ஐந்து போர்களைப் பார்த்தவர். இரண்டாம் உலகப்போர், 1947-ம் ஆண்டு இந்தோ-பாக் போர், 1962-ம் ஆண்டு இந்தியா- சீனா போர், 1965, 1971 இந்தியா - பாகிஸ்தான் போர்களில் சாம் மானக்‌ஷாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.  

இரண்டாம் உலகப்போரின்போது 4/12 Frontier Force Regiment பிரிவின் கேப்டனாக பர்மாவில் போரிட்டார் சாம். சிட்டாங் நதிக் கரையில் ஜப்பானியர்களுடன் கடும் யுத்தம். சாம் மானக்‌ஷா உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்தன. அப்போதும் சாம் மானக்‌ஷா கையில் இருந்த துப்பாக்கி சீறுவதை நிறுத்தவில்லை. மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்து குண்டுகளை அகற்றியபோது, `உடலில் எப்படி இத்தனை குண்டுகள் பாய்ந்தன?' என்று அவரிடம் கேட்டனர். `கழுதை ஒன்று உதைத்துவிட்டது' என்று வலியிலும் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். மானக்‌ஷா. பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் அவரின் பேச்சில் எப்போதும் நகைச்சுவை இழையோடும். 

இந்திரா காந்தியுடன் ஷாம் மானக் ஷா

1971-ம் ஆண்டு இந்தியாவிடம் பாகிஸ்தான் வாலாட்டிக்கொண்டிருந்தது. ராணுவம் குறித்த எந்த முடிவு எடுத்தாலும் முன்னதாகவே சாம் மானக்‌ஷாவிடம் கேட்டுவிடுவார் பிரதமர் இந்திரா காந்தி. பாகிஸ்தானை அடக்க இந்திரா காந்தி தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். இந்திரா காந்தியின் மனநிலை தெரியாமல் எல்லையோரத்தை பாகிஸ்தான் தாக்கியது. சாம் மானக்‌ஷாவுக்கு போன் செய்த இந்திரா காந்தி, `ஜெனரல், ஆர் யூ ரெடி?' என்று கேட்க,  `நான் எப்போதோ தயாராகிவிட்டேன்' என்று அடுத்த விநாடி பதில் வந்தது. பாகிஸ்தான் கதையை ஒரே வாரத்தில் முடிக்க, `வங்கதேசம்' என்ற புதிய நாடு பிறந்தது. 

பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் யாயா கான், 1947-ம் ஆண்டு பிரிவினைக்கு முன் இந்திய ராணுவத்தில் சாம் மானக்‌ஷாவின் ஜூனியராகப் பணியாற்றினார். சாம் மானக்‌ஷாவிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை யாஹ்யா கான் வாங்கியிருந்தார். அதற்கான பணம் ஆயிரம் ரூபாயை யாயா கான், சாம் மானக்‌ஷாவுக்குக் கொடுக்கவில்லை. யாஹ்யா  கான் ஆட்சியில்தான் பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தானை இழந்தது. `மோட்டார் சைக்கிளுக்குப் பணம் தராத யாஹ்யா கான், தன் நாட்டில் ஒரு பகுதியையே எனக்குக் கொடுத்தார்' என்று யாயா கான் குறித்து சாம் மானக்‌ஷா விளையாட்டாகச் சொல்வார்.

ராணுவப் புரட்சி செய்ய சாம் மானக்‌ஷா திட்டமிடுவதாக வதந்தி கிளம்பியிருந்தது. அதுகுறித்து சாம் மானக்‌ஷாவிடம் இந்திரா காந்தி கேட்க, ``பிரைம் மினிஸ்டர் மேடத்துக்கு என் மீது நம்பிக்கை இல்லையா? உங்களுக்கும் நீண்ட மூக்கு. எனக்கும் நீண்ட முக்கு. நான் ஒருபோதும் மற்றவர்கள் விஷயத்தில் என் மூக்கை நுழைப்பதில்லை. அரசியல்ரீதியாக எந்த விஷயத்திலும் நான் தலையிடுவதில்லை. அதேபோல், நீங்களும் ராணுவத்தில் தலையிட வேண்டாம்'' என்று பளீர் பதில் சொன்ன வல்லவர் சாம்.

ஷாம் மானக் ஷா

சாம் மானக்‌ஷாவுக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கூர்கா பிரிவில் பணியைத் தொடங்கினாலும் நாட்டுக்காகப் பல போர்களில் வெற்றி தேடிக்கொடுத்த உதகை வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப் பிரிவைதான் அவர் மிகவும் நேசித்தார். அதனால்தான், தன்  இறுதிக்காலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில் கழித்தார். 2008-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி சாம் மானக்‌ஷா மரணமடைந்தார். 

ஏப்ரல் 3 - சாம் மானக்‌ஷாவின் 104-வது பிறந்த தினம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்