வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (03/04/2018)

கடைசி தொடர்பு:17:22 (03/04/2018)

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னேற்றம் 

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னேற்றம் 

ஒரு பாசிட்டிவான தொடக்கத்திற்குப் பின் சரிந்து, வர்த்தகம் முடிய ஒரு மணி நேரம் இருக்கும் வரை நஷ்டத்தில் பயணித்த இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளாக சென்செக்ஸும் நிஃப்டியும், வங்கித்துறை மற்றும் சில ஆட்டோமொபைல் பங்குகளின் நல்ல முன்னேற்றத்தினால் இன்று லாபத்தில் முடிவடைந்தன.

மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 115.27 புள்ளிகள் அதாவது 0.35 சதவிகிதம் முன்னேறி 33,370.63 என முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 33.20 புள்ளிகள், அதாவது 0.33 சதவிகிதம் உயர்ந்து 10,245.00-ல் முடிவுற்றது.

வர்த்தக யுத்தம் பற்றி மீண்டும் அதிகரித்து வரும் கவலை காரணமாக நேற்று அமெரிக்கச் சந்தையில் பங்குகள் சரிவைக் கண்டன. டவ் ஜோன்ஸ், நாஷ்டாக் மற்றும் S&P 500 குறியீடுகள் முறையே 1.9 சதவிகிதம், 2.7 சதவிகிதம், 2.2 சதவிகிதம் வரை இழந்தன. 

அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன நாட்டின் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான வரிவிதிப்பை டொனால்டு டிரம்ப் விதித்ததை அடுத்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு சைனாவில் இறக்குமதியாகும் 128 பொருள்களுக்கு சீனா விதித்திருக்கும் 15 முதல் 25 சதவிகிதம் வரையிலான வரியின் காரணமாக அமெரிக்கச் சந்தையில் தொய்வு ஏற்பட்டது.

வர்த்தக யுத்தம் பற்றிய கவலையினால், அமெரிக்கா டெக்னாலஜி பங்குகளின் நேற்றைய சரிவினாலும் ஆசியப் பங்குச்சந்தைகள் இன்று பெரும்பாலும் கீழிறங்கின. தவிர, அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பானிய கரென்சியான யென்னின் மதிப்பு உயர்ந்ததும் ஆசியச் சந்தைகளின் மந்த நிலைக்கு ஒரு காரணமாக இருந்தது.

ஐரோப்பியச் சந்தைகளும் தற்போது தொய்வான நிலையிலேயே காணப்படுகின்றன. இன்று வெளியாகியிருக்கும் சில பொருளாதாரச் செய்திகள் திருப்திகரமாக இல்லாததாலும், டிரேட் வார் குறித்த கவலையுமே இதற்கு காரணம்.

இந்நிலையில், இந்தியச் சந்தை இன்று முன்னேற்றம் கண்டிருப்பதற்கு முக்கியமாக இரு காரணங்களைக் கூறலாம்.

1. மத்திய ரிசர்வ் வங்கியின் நேற்று வங்கிகள் கடந்த அக்டோபர் - டிசம்பர் 2017 மற்றும் ஜனவரி - மார்ச் 2018 காலாண்டுகளின் பாண்ட் டிரேடிங் இழப்பை (Bond Trading Losses), அடுத்த நான்கு காலாண்டுகளுக்கான கணக்கில் ப்ரொவிஷன் செய்து கொள்ளலாம் என அறிவித்திருப்பதையடுத்து, இன்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகள் விலை உயரக் காரணமாக அமைந்தது.

2.  மார்ச் மாதத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கண்ட அதிக விற்பனை காரணமாக இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆட்டோமொபைல் பங்குகள் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில், மார்க்கிட் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் உற்பத்தித் திறன் கடந்த ஐந்து மாதங்களில் கண்டதை விட குறைவான வேகத்தில் முன்னேறியிருக்கிறது என்பது சற்று கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இருப்பினும், பிசினஸ் கான்ஃபிடன்ஸ் குறையவில்லை என்பது ஓர் ஆறுதலான விஷயமே.

வரும் வியாழனன்று தன்னுடைய மானிட்டரி பாலிசியை அறிவிக்கவிருக்கும் மதிய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமேதும் செய்யாது என்று பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது.

ஆட்டோமொபைல் மற்றும் வங்கித்துறைப் பங்குகள் தவிர, பவர் துறை பங்குகளும் இன்று நன்கு முன்னேறின. ஆயில், டெலிகாம், ரியல் எஸ்டேட், மெட்டல் மற்றும் மருத்துவத்துறை சேர்ந்த சில பங்குகளும் ஓரளவு விலையுயர்ந்தன. டெக்னாலஜி மற்றும் எப்.எம்.சி.ஜி பங்குகள் பெரும்பாலும் ஒரு தொய்வடைந்த நிலையில் காணப்பட்டன.

இன்று மும்பைப் பங்குச் சந்தையில் 1846 பங்குகள் விலை உயர்ந்தும், 796 பங்குகள் விலை குறைந்தும், 145 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

இன்று விலை ஏறிய சில பங்குகள் :

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 3.2%
மஹிந்திரா & மஹிந்திரா 3%
பஜாஜ் பைனான்ஸியல் 2.8%
இந்தியாபுல்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் 4.6%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 2.5%
இந்தியன் ஆயில் 2.4%
யெஸ் பேங்க் 2.2%
ஸ்டேட் பேங்க் 1.9%
பவர் க்ரிட் 1.9%
யு.பி.எல் 1.7%

விலை குறைந்த பங்குகள் :

டெக் மஹிந்திரா 3.8%
விப்ரோ 1.8%
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 1.1%
ஹிண்டால்கோ 1.6%
ஓ.என்.ஜி.சி  1.4%


டிரெண்டிங் @ விகடன்