`சாமியார்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவிக்கான அந்தஸ்து!’- மத்தியப் பிரதேச அரசு உத்தரவு

மத்தியப் பிரதேசத்தில், 5 சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கியுள்ளது, சிவராஜ் சிங் சௌகான் அரசு.

மத்தியப் பிரதேசத்தில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, 5 சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்துள்ள பதவியை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் வழங்கியுள்ளார்.

நர்மதா நதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தம்செய்வது தொடர்பாகப் பல பிரச்னைகள் எழுந்தன. இதனால், அந்த நதியைத் தூய்மை செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நர்மதா நதியைப் பாதுகாக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, மாநிலத்தில் உள்ள 5 இந்து அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்புகளின் தலைவர்களுக்கு, நதி பாதுகாப்பு அமைப்பின் கமிட்டித் தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்து அமைப்பின் தலைவர்களான கம்ப்யூட்டர் பாபா, நர்மதானந்த் மகாராஜ், ஹரிஹரநாத் மகாராஜ், பயு மகாராஜ், மற்றும் பண்டிட் யோகேந்திர மகந்த் ஆகியோருக்கு மாநிலத்தின் இணையமைச்சருக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

இந்தச் செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே பா.ஜ.க இவ்வாறு செய்வதாகவும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, இந்து அமைப்புகள் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சாமியார்களுக்கு அமைச்சர் பதவிக்கான அந்தஸ்து வழங்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்ப்யூட்டர் பாபா, முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு எதிராக நர்மதை ஆறு திட்டத்தில் நடக்கும் ஊழல்களை,  நடைப்பயணம்மூலம் வெளிக்கொண்டு வர உள்ளதாகவும். முதல்வருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுப்படப்போவதாகவும் அறிவித்திருந்த நிலையில், அவருக்கு இணையமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!