சல்மான்கான் குற்றவாளி - மான் வேட்டையாடிய வழக்கில் அதிரடித் தீர்ப்பு | Jodhpur court convicts Salman Khan, acquits rest in 1998 blackbuck poaching case

வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (05/04/2018)

கடைசி தொடர்பு:15:09 (05/04/2018)

சல்மான்கான் குற்றவாளி - மான் வேட்டையாடிய வழக்கில் அதிரடித் தீர்ப்பு

மான் வேட்டையாடிய வழக்கில், நடிகர் சல்மான்கானை குற்றவாளியாக அறிவித்தது, ஜோத்பூர் நீதிமன்றம்.

சல்மான் கான்

கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின்போது, பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக்  என்ற அரிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகவும், அவர் வேட்டையாடும்போது நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,  இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

பல வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 2007-ம் வருடம் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது, பின்பு, நடிகர் சல்மான் கான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம், நடிகர்கள் தங்கள் தரப்பின் வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, சென்ற மாதம் 28 -ம் தேதி, இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு, தீர்ப்பு  ஏப்ரல் 5- ம் தேதி வழங்கப்படும் என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை கூடிய ஜொத்பூர் நீதிமன்றத்தில், நடிகர்கள் அனைவரும் நேரில் வந்து ஆஜராகினர். நடிகர் சல்மான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டையும் 10,000 ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது . மேலும், நடிகர் சயிஃப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.