மான்களும் மார்புகளும்... பிஷ்னாய் மக்களின் சல்மான் கான் வேட்டை! #BlackBuckPoachingCase

ஒரு மார்பில் குழந்தையும் இன்னோர் மார்பில் மான்களும் பால் குடிப்பதை இங்கே பார்க்க முடியும்.

மான்களும் மார்புகளும்... பிஷ்னாய் மக்களின் சல்மான் கான் வேட்டை! #BlackBuckPoachingCase

மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது ஜோத்பூர் நீதிமன்றம். சல்மான் கானுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தது யார் தெரியுமா பிஷ்னாய் மத மக்கள். பிஷ்னாய் என்றால் கோட்பாடுகளை பின்பற்றுவர்கள் என்று அர்த்தம்.

ராஜஸ்தானில் பல ஆயிரம் மக்களால் பின்பற்றப்படும் மதம்தான் பிஷ்னாய். தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். குரு ஜம்பேஷ்வர் என்பவர் 15ம் நுற்றாண்டில் பிஷ்னாய் என்னும் அமைப்பை தோற்றுவித்தார். அது இன்று ஒரு மதம்போல மாறியிருக்கிறது.  ஜம்பேஷ்வர் வகுத்த 29 நெறிகளுள் 'வனவிலங்குகள், பறவைகளை கொல்லாமை... இயற்கைக்கு இடையூறு செய்யாமை முக்கியமானவை. குருவின் போதனைகளை  இன்றுவரை அச்சு பிசகாமல் பின்பற்றுபவர்கள் பிஷ்னாய் மக்கள். 

கெஜ்ரி மரம்தான் ராஜஸ்தான் மாநில மரம். 1600-களில் இந்த மரங்களை வெட்ட ஜோத்பூர் மகாராஜா முடிவு செய்த போது, பிஷ்னாய் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜாவின் படைகளை எதிர்த்து போரிட்டனர்.  பெண்கள் போர்க்களத்துக்கு வந்து உயிர் துறந்தனர். மரத்துக்காக அமிர்தா தேவி என்ற பிஷ்னாய் அமைப்பைச் சேர்ந்த பெண் முதன் முதலில் உயிர் தியாகம் செய்தார். பிற்காலத்தில், உத்ரகாண்டில் மரங்களை காக்க 'சிப்கோ இயக்கம்' தோன்ற அமிர்தா தேவிதான் இன்ஸ்பிரேஷன்.

ஒவ்வொரு பிஷ்னாய் குடும்பமும் வீட்டில் சிறிய தொட்டி அமைத்து தினமும் நீர் நிரப்பி வைக்க வேண்டும். பாலைவன பூமியில் பல கிலோமீட்டர் பறந்தால்தான் பறவைகளுக்கு இரை கிடைக்கும். உணவு கிடைத்தாலும் தண்ணீர் கிடைப்பது கடினம். பறவைகளின் தாகத்தை தீர்க்கவே நீர் தொட்டி. வனவிலங்குகள் இந்த மக்களுக்கு குழந்தைகள். தாயை இழந்த மான்குட்டிகள் பிஷ்னாய் இனப் பெண்களின் மார்புகளில் பால் குடித்து வளர்வது இங்கே சகஜமானது. வறண்ட பாலையில் வாழ்ந்தாலும் சக உயிர்களையும் தன்னை போலவே கருதும் மனிதர்கள் உலவும் ஈரம் நிறைந்த மண் இது. 

பிஷ்னாய் மக்களின் பின்னணி துப்பாக்கி தூக்கிய  சல்மானுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.1998-ம் ஆண்டு, ஜோத்பூர் அருகே 'ஹம் ஹம் சாத் ஹெயின் ' என்ற படத்தின் படப்பிடிப்பு. நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோரும் சல்மானுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தனர். கொண்டாட்டமும், குதூகலமுமாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்படி ஒரு நாள் உற்சாகத்தில் இருந்த சல்மான் கான், மற்ற நடிகர்களையும் அழைத்துக்கொண்டு ஜிப்ஸி காரில் மான்வேட்டைக்குப் பறந்திருக்கிறார். ஜோத்பூர் அருகே கங்கானி என்ற கிராமத்துக்குள் ஜிப்சி சென்றது. எதிரே கும்மிருட்டில்( Blackbuck )கருப்புமான்கள் கூட்டம் தென்பட்டது. துப்பாக்கியை எடுத்த சல்மான், ஹெட்லைட் வெளிச்சத்தில் மான்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். சல்மான் மான்களை  சுட்டதை இருட்டுக்குள் இரு விழிகள் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த விழிகளுக்கு சொந்தக்காரர் பூனம்சந்த் பிஷ்னாய். கிராம மக்களை திரட்டி பூனம்சந்த் சல்மானை விரட்ட ஜிப்ஸியில் தப்பியிருக்கிறது நடிகர் கூட்டம்.

'அன்பு நிறைந்த மக்கள் உலவும் பூமியில் துப்பாக்கி  சத்தமா? ' என்று மனதுக்குள் புழுங்கினார் பூனம்சந்த். மான்களை சுட்ட 'சல்மான் அண்ட் கோ' உயிரிழந்த மான்களின் உடல்களை அப்படியே போட்டு விட்டு தப்பித்து சென்று விட்டது. பிள்ளைகள் போல பாவித்த மான்குட்டிகள் இரண்டு சலனமற்று கிடக்க அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாகனத்தின் எண்ணைத் தெளிவாக குறித்து வனத்துறைக்கு தகவலும் அளித்த பின்னரே அவரால் அமைதியாக முடிந்தது. 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்ற சம்பவம் இது.  

நடிகர் சல்மான்கான்

விடிந்ததும்  பூனம் சந்த்,  'பிஷ்னாய் மகா சபா' என்ற அமைப்பின் கவனத்துக்கும் விஷயத்தை கொண்டு சென்றார். கொதித்தெழுந்த பிஷ்னாய் மக்கள் சல்மான்கான் உள்ளிட்ட ஐவர் மீதும் போலீசில் புகார் அளித்தனர்.. அக்டோபர் 17-ம் தேதி, சல்மான்கான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், இன்று சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பூனம்சந்த் ஒருவர்தான் சல்மான், மான்களை சுட்டதை கண்ணால் கண்ட ஒரே சாட்சி. கடைசி வரைதான் அளித்த சாட்சியில் அவர் உறுதியாக இருந்தார். ஜோத்பூர் நீதிமன்றத்தில் பூனம்சந்த் அளித்த சாட்சியில், ''இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த எனக்கு  திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம் அதிர்ச்சியளித்தது. அப்போது, ஜீப் ஹெட்லைட் வெளிச்சத்தில் சல்மான் கான் மான்களை நோக்கி சுட்டார். பின் இருக்கையில் சயீஃப் அலி கான், சோனாலி, தபு, நீலம் ஆகியோர் அமர்ந்திருந்தனர் '' என்று தெள்ளத் தெளிவாக நீதிமன்றத்தில் சாட்சியளித்திருந்தார்.

வனவிலங்குகள் சட்டத்தின்படி கருப்புமான்களை வேட்டையாடினால்,  6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. ஏற்கனவே, ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடிய இரு வழக்குகளில் இருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்ட்டுள்ளார். சிவப்பு அட்டவணையில் இடம் பெற்றுள்ள அரிய வகை சிங்காரா மான்களை வேட்டையாடிய வழக்கில்  சல்மான் விடுவிக்கப்பட்டாலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

கருப்பு மான் வேட்டையாடிய வழக்கில்  தபு உள்ளிட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிஷ்னாய் மகா சபா, விடுவிக்கப்பட்டவர்களையும் சிறைக்கு அனுப்பாமல் விட மாட்டோம்.. உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்கிறது. சல்மான் பிஷ்னாய் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ச்சியாக ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடியதே கோபத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

தற்போதையை நிலையில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சல்மான்கான்தான். கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வியாபாரம் இவரை நம்பியிருக்கிறது என்கிறது பாலிவுட். ஜோத்பூர் நீதிமன்றத் தீர்ப்பால் பாலிவுட்டே இப்போது ஆடிப் போய் கிடக்கிறது!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!