வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (06/04/2018)

கடைசி தொடர்பு:12:31 (06/04/2018)

சூப்பர் ஹீரோக்கள் கூட கொல்லவே செய்கிறார்கள்..! - கலைமான் இனத்தின் சோகக்கதை

இப்போது எல்லோரும் சல்மான் கானை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே பேசப்பட வேண்டியது கொல்லப்பட்ட மான்களைப் பற்றிதான்.

சூப்பர் ஹீரோக்கள் கூட கொல்லவே செய்கிறார்கள்..! - கலைமான் இனத்தின் சோகக்கதை

இந்தித் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர்களுள் அப்போது அவர் முக்கியமானவர். பல ஆண்டுகளாக இந்தித் திரை உலகில் தனக்கான தனி இடம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் Hum Aapke Hain Koun முக்கிய இடத்தைப் பிடித்தது. 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. அப்போதிலிருந்து அவரது சினிமா வாழ்க்கை வளர்ச்சியை நோக்கியே பயணித்தது. பணம், புகழ் என உச்சத்தில் இருந்த சல்மான் கானின் வாழ்வில் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது அந்தக் கலைமான் வரும் வரை…

கலைமான்

Pc - maxresdefault

1998 ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  ``Hum Saath Saath Hain” எனும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் தங்கியிருந்தார்.  படப்பிடிப்பின் இடைவெளியில் கங்கனி கிராமத்துக்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் இரண்டு கலைமான்களை வேட்டையாடுகிறார். அப்போது அவரோடு நண்பர்களும் சக  நடிகர்களுமான சைப் அலிகான், நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் உடனிருந்தனர். இந்தச் சம்பவத்தை எதிர்த்து உள்ளூர் பிஷ்ணோய் (Bishnoi) இன மக்கள் அக்டோபர் மாதம் 2 தேதி சல்மான் மற்றும் நடிகர்கள் மீது  வழக்குப் பதிவு செய்கிறார்கள். நீதி மன்றம், கைது, பெயில், விசாரணை, ஹைகோர்ட் எனப் பயணித்த வழக்கு 20 ஆண்டுகளைக் கடந்து இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் ஜெயில் 10,000 ரூபாய் அபராதம் விதித்து ஜோத்பூர்  நீதிமன்றம் வழக்கை முடித்துவிட்டது. இப்போது எல்லோரும் சல்மான் கானை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே பேசப்பட வேண்டியது கொல்லப்பட்ட மான்களைப் பற்றிதான்.

சல்மான் 

Pc - IBTimes India

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய ஆசிய நாடுகளில் இருக்கிற மான் Blackbuck. தமிழில் கலைமான். ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் இருக்கின்றன. பெண் மான்களுக்குக் கொம்புகள் இருப்பதில்லை. இந்திய விலங்குகளில் சிறுத்தைக்கு அடுத்து மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது கலைமான். ஆண் கலைமான்கள் கறுப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். இவை தொலைவிலிருந்தே எதிரிகளின் வரவைக் கவனித்துவிடும். வயதான ஆண் கலைமானே மந்தையின் தலைவனாக இருக்கும். எதிரிகள் யாரேனும் நெருங்குவதை முன்பே உணரும் தலைவன் துள்ளிக் குதித்து மற்ற கலைமான்களுக்கு எச்சரிக்கும். உடனே மந்தையிலுள்ள மான்கள் அனைத்தும் உயர்ந்து எழுந்து துள்ளி ஓடும். இவை ஏறக்குறைய 3 மீ  உயரம் வரை செங்குத்தாக துள்ளிக் குதிக்கும் திறன் படைத்தவை.

உயிருக்கு ஊறு விளைவிக்கும் வன விலங்குகளின் நடமாட்டம் இல்லாத சம அளவிலான தரைதளங்களில் கலைமான்கள் வசிக்கும். ஆண் மான், பெண் மான் இரண்டும் தன்னுடைய 2 வயதில் பருவமடைகின்றன. ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் நடந்தாலும் ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் வரையிலும் மிக அதிகமான இனப்பெருக்கங்கள் நிகழ்கின்றன. ஆண்டுக்கு இரண்டு குட்டிகள் இடும் கலைமான்கள் குட்டிகளை மூன்று மாதங்கள் தன்னுடைய பாதுகாப்பில் வைத்து வளர்க்கும். இனப்பெருக்க காலத்தில் ஆண் கலைமான்கள் தங்களுக்கென்று ஓர் எல்லையை நிர்ணயிக்கும். சராசரியாக ஓர் ஆண் கலைமானின் எல்லை 1 முதல் 17 ஹெக்டர் வரை இருக்கும். ஆண் தன்னுடைய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான கலைமான்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆண் தன்னுடைய எல்லையை 2 வாரம் முதல் 8 மாதம் வரை பாதுகாக்கும். இவை தங்களுடைய எல்லைகளைச் சிறுநீர், மலம், ஒரு வகையான திரவம் மூலம் குறித்து வைத்துக்கொண்டு, அந்த எல்லையைச் சுற்றி மட்டுமே வரும். அப்பொழுது வேறோர் ஆண் தன் எல்லையில் நுழைந்தாலோ வேறு வகையான எல்லைச் சிக்கல்கள் வரும்பொழுதோ, தன்னுடைய தோற்றத்தை வைத்து எதிரிகளுக்கு எச்சரிக்கை சைகைகள் எழுப்பி எல்லையைப் பாதுகாக்கும். ஆபத்தான காலங்களில் கொம்புகளைக் கொண்டு முட்டி மோதி சண்டைகள் நடக்கும். இதன் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 - 12 ஆண்டுகள். இனத்தின் மற்ற ஆண் கலைமான்கள் இன்னோர் ஆண் கலைமானின் எல்லையில் நுழையும் முன்பு அங்கிருக்கும் சிறுநீர், மலத்தை நுகர்ந்து அந்த எல்லைக்குள் செல்வதை தவிர்க்கும். 1947 ம் ஆண்டு 80,000 அளவில் இருந்த கலைமான்களின் எண்ணிக்கை 2008 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 184 மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கலைமான்கள் எண்ணிக்கை குறைவுக்கு வேட்டையாடப்பட்டது மட்டுமே  முக்கியக் காரணம். காடுகள் குறுகியதும் , நகரமயமாதல் பெருகியதும் கலைமான்களின் அழிவுக்கு மற்ற காரணங்கள்.

கலைமான்

அழிந்து வரும் வன விலங்குகளைப் பாதுகாக்க இந்திய அரசு 1972 ம் ஆண்டு வன விலங்குச் சட்டம் ஒன்றை இயற்றியது. இச்சட்டத்தில் ஆறு பட்டியல்கள் உள்ளன. பட்டியல் ஒன்று மற்றும் பட்டியல் இரண்டில் இருக்கிற விலங்குகள் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவை. இப்பட்டியல்களில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுவது, காயப்படுத்துவது என எது நிகழ்ந்தாலும் இச்சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்கும். அந்தச் சட்டப்பிரிவில் கலைமான் அழிந்து வரும் விலங்குகளின் முதல் பட்டியலில் இருக்கிறது. இதுவே, சல்மான்கான் 20 ஆண்டுகள் கடந்தும் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்தது. சல்மான்கான் சிறைக்குச் செல்வதும் பெயிலில் வருவதும் செய்வதும் புதிதல்ல. அனுமதியில்லாமல் ஆயுதம் வைத்திருந்தது,  நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏற்றியது எனப் பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். ஆனால், மனிதர் வெளியே வந்துவிட்டார். கடைசியில் மானிடம் மாட்டியிருக்கிறார்.

வருத்தங்கள் சல்மான்


டிரெண்டிங் @ விகடன்