வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (06/04/2018)

கடைசி தொடர்பு:21:30 (06/04/2018)

எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி -விரைவில் குணமடைய பிரார்த்திக்கும் எதிர்க்கட்சிகள்!

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக, அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அருண்ஜெட்லி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, கடந்த சில தினங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அருண் ஜெட்லிக்கு இந்த வார இறுதியில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இவர், விரைவில் குணமடைய வேண்டும் என பல ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உங்களின் உடல்நலம்குறித்து கேள்விப்பட்டு மிகுந்த கவலையடைந்தேன். நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ நீங்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, “உங்களின் உடல்நலம்குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். நீங்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

         'அருண் ஜெட்லியின் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும்' எனப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அருண் ஜெட்லி சிறுநீரக தொற்று பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.