வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (07/04/2018)

கடைசி தொடர்பு:15:45 (07/04/2018)

சிறைத்தண்டனை அளித்த நீதிபதியே சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கினார்!

மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் கிளை நீதிமன்றம்.

சல்மான்கான்

மான் வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சயீஃப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரை விடுதலை செய்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம்  உத்தரவிட்டது. கடந்த இரு தினங்களாக சல்மான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தண்டனை பெற்றவுடன், உடனடியாக ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஜோத்பூர் கிளை நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், சல்மான்கான் வழக்கில் தண்டனை வழங்கிய நீதிபதி ரவீந்திர குமார், ஜோத்பூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்செய்யப்பட்டார். இதனால் சல்மான்கானின் ஜாமீன் மனுவை விசாரிப்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து இன்று காலை நீதிமன்றம் தொடங்கியவுடன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஆனால், இதன் தீர்ப்பு பிற்பகல் அறிவிக்கப்படும் எனக் கூறி நீதிபதி இந்த மனுவை ஒத்திவைத்தார். இன்று பிற்பகல் மீண்டும் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்த நீதிபதியே தற்போது ஜாமீனும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.