ஆச்சர்யம் அளித்த சல்மான்கானின் செயல்! - சிறை வாழ்க்கையை விவரித்த அதிகாரிகள்

சிறையில் உள்ள நடிகர் சல்மான் தனது உணவைத் தவிர்த்து, உடற்பயிற்சி மட்டுமே மேற்கொண்டு வந்ததாக சிறை கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சல்மான்கான்

மான் வேட்டையாடிய வழக்கில் கடந்த வியாழக்கிழமையன்று ராஜஸ்தான் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு உடனடியாக ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

கடந்த 05-04-2018 அன்று பிற்பகல் நடிகர் சல்மான்கான் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து சரியாக உணவு சாப்பிடவில்லை என்றும் ஆனால் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார் எனவும் சிறை கண்காணிப்பாளர் விக்ரம் சிங் தெரிவித்துள்ளார். விக்ரம் சிங் ஊடகங்களிடம் பேசியதாவது.. “நடிகர் சல்மான்கான் ராஜஸ்தான் ஜோத்பூர் சிறையில், அறை எண் 106 -ல் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட அன்று அமைதியற்ற நிலையில் காணப்பட்டார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் தொடந்து உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவில் தூங்கச் சென்றுவிட்டு அதிகாலையிலே எழுந்துவிட்டார். 

அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை சிறை அதிகாரியிடம் எனக்கு ஒரு டம்ளர் பாலும் பிரட் மட்டும் வேண்டும் என கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். வெள்ளிக்கிழமையன்று அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் மிகவும் அமைதியற்ற நிலையில் தனது அறையிலேயே நிற்காமல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார். அன்று நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் அவரின் சகோதரியும், சல்மான்கானை சிறையில் வந்து சந்தித்தார்கள். அவர்கள் சென்ற பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்ய துவங்கிவிட்டார். அன்று பிற்பகல், இரவு என எந்த வேளையும் அவர் உணவு உட்கொள்ளவில்லை. சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு தண்ணீர் போன்றவையே இவருக்கும் வழங்கப்பட்டது. தான் ஒரு பிரபலம் என்பதை பெரிதாக காட்டிக்கொள்ளாமல் அவர் சிறையில் அமைதியாக இருந்தார். சல்மான்கான் ஒரு கடினமான மனிதர், இவரின் செயல் எங்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளித்தது.” இவ்வாறு சிறை கண்காணிப்பாளர் கூறினார்

மேலும், நடிகர் சல்மான் அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில்தான் பாலியல் வழக்கில் கைதான சாமியார் அஸராம் பாபு இருக்கிறார். சல்மான்கான் சிறையில் இந்தச் சாமியாரை சந்தித்ததாக ஒரு தரப்பினர் கூறிவந்தனர் ஆனால், விக்ரம் சிங் அதை மறுத்துள்ளார். சல்மான்கான் தனது அறையைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!