ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எழுப்பிய புதிய கேள்வி!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எழுப்பிய புதிய கேள்வி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு  வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுள் ஒருவரான செலமேஸ்வர் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 

செல்லமேஸ்வர்

டெல்லியில் நடந்த ஹார்வர்டு க்ளப் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் நடத்திய “ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் கரண் தாப்பர் உடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கலந்துகொண்டார். அப்போது நீதிபதி செலமேஸ்வர் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்தும் பல கேள்விகளை அவர் முன்வைத்தார். அந்த வழக்கு விசாரணை முடிந்தும், தீர்ப்பு ஒருவருடம் தாமதிக்கப்பட்டதின் நோக்கம் என்ன? தாமதமான தீர்ப்பால் கிடைத்தது என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பினார். 

இந்த வழக்கு என்று மட்டும் இல்லாமல், பல்வேறு வழக்குகள்  குறித்தும், அவர் கேள்வி எழுப்பினார். இந்திய மருத்துவ கவுன்சில் ஊழல் தொடர்பாக வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செலமேஸ்வர், அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினார். ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்த வழக்கை புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார். இதுகுறித்து கேள்வியெழுப்பிய செலமேஸ்வர், `அந்த வழக்கில் எனது தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில் என்ன பிரச்னை இருந்தது எனத் தெரியவில்லை. அந்த வழக்கில் புதிதாக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும்போது, மூத்த நீதிபதி என்கிற முறையில் என்னிடம் தெரிவிக்க வேண்டியது மரபு’’ என்றார். 

நீதித்துறையில் பணியாற்றுபவர்கள், பொதுவெளியில் நீதிமன்றம் குறித்தும், வழக்குகள் குறித்தும் விவாதிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ மாட்டார்கள். ஆனால், செலமேஸ்வர் உச்ச நீதிபதியாக பணியில் இருக்கும்போதே நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். நீதிபதி செலமேஸ்வர் உள்பட உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து பத்திரிகையாளர்களிடம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!