வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (08/04/2018)

கடைசி தொடர்பு:13:04 (09/04/2018)

"இவர்களை யார்தான் காப்பாற்றப் போகிறார்கள்..?'' வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடக்கும் அரசியல்!

அமித் ஷா ராகுல் காந்தி

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஓட்டு அரசியலுக்காக, போட்டிபோட்டு உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கிறார்களே தவிர, யார் அந்த மக்களைக் காப்பாற்றப்போகிறார்கள் என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது.

தமிழகத்தில் காவிரி நீருக்கான போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது என்றால், வட மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது, ``ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களை உடனடியாகக் கைது செய்யக் கூடாது; டி.எஸ்.பி நிலை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் மட்டுமே மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ``இந்தத் தீர்ப்பு, வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும்'' என்று குற்றம்சாட்டிய அமைப்புகள், கடந்த 2-ம் தேதி நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தில் வட மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கலவரம் மூண்டது. இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். 

கலவரத்தையும் வன்முறையையும் ஒடுக்க, மத்திய போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை உஷார்  நடவடிக்கையாக ராணுவமும் குவிக்கப்பட்டது. போராட்டங்களில் நடந்த வன்முறை தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் போராட்டம், வன்முறைகளைக் குறிப்பிட்டு கடந்த 5-ம் தேதி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பாக அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ``நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது போன்ற பதற்றமான சூழ்நிலையை இந்தத் தீர்ப்பு உருவாக்கியுள்ளது. பலர் இறந்துவிட்டனர். அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

தீபக் மிஸ்ரா

ஏற்கெனவே, தீர்ப்பளித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கே இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனுப்பிவைத்தார். அந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் அமர்வு, ``தாழ்த்தப்பட்டோர்  வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உத்தரவுகளுக்குத் தடை விதிக்க முடியாது. அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதே தங்களின் நோக்கம்'' என்றும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர். மேலும், ''இன்னும் 10 நாள்களில் மத்திய அரசின் மறுஆய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த விசாரணையின்போது, விருப்பப்படும் அனைத்துக் கட்சிகளும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான தங்களது கருத்துகளை எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கலாம்'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் உடனடி பரிகாரம் கிடைக்காத நிலையில், வட இந்தியாவில் பரவலாகப் போராட்டம், அப்படியே தொடர்கிறது. இதற்கிடையே, ஆதிதிராவிடர் - பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட இருப்பதாகத் தகவல் பரவியதால் சில பகுதிகளில் போராட்டம் அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை பி.ஜே.பி தேசிய தலைவர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார். பி.ஜே.பி-யின் 38-வது ஆண்டு நாளை முன்னிட்டு மும்பையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாங்கள் செய்த பணிகளைச் சொல்லித்தான் வாக்குக் கேட்போம். வெற்று வாக்குறுதிகள் அளிக்கமாட்டோம். எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் தகர்த்து வருவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மற்றவர்களும் கூறி வருகின்றனர். இட ஒதுக்கீடு கொள்கையை பி.ஜே.பி. ஒருபோதும் கைவிடாது. நீங்கள் கைவிட முயன்றாலும், பி.ஜே.பி. ஒருபோதும் அதை அனுமதிக்காது. அரசியலைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள இடஒதுக்கீடு தொடரும்'' என்றார்.

வன்கொடுமை

இந்நிலையில், வன்கொடுமைச் சட்டம் குறித்து போராட்டங்களைக் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்துக்காகத் தூண்டிவிடுவதாக பி.ஜே.பி தலைவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அதேநேரத்தில், இந்த அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்த அனைத்துவித போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. வருகிற 9-ம் தேதி, நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி  அழைப்புவிடுத்துள்ளார். நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பேண வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

பி.ஜே.பி-க்கு எதிரான இந்தப் போராட்ட அறிவிப்புகளுக்கு  இடையே பல்வேறு  தலித் விடுதலை அமைப்புகளும் காங்கிரஸ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பி.ஜே.பி கடுமையாக விமர்சித்துள்ளது. பிரித்தாளும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுதாக பி.ஜே.பி குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி பி.ஜே.பி-யினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்க் கட்சியும் ஆளும் கட்சியும் ஓட்டு அரசியலுக்காக, போட்டிபோட்டு உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கிறார்களே தவிர, யார் அந்த மக்களைக் காப்பாற்றப்போகிறார்கள் என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில், அகிம்சை வழியில் எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டத்தை காந்தி முன்னெடுத்தார். ஆனால், இப்போது...?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்