இன்ஜின் இல்லாமல் 10 கி.மீ தூரம் ஓடிய ரயில் பெட்டிகள்! - ரயில்வே ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

எக்ஸ்பிரஸ்

அதிகாரிகளின் கவனக் குறைவால் அஹமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்ஜின் இல்லாமல் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. 

22 பெட்டிகளைக் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அஹமதாபாத்தில் இருந்து பூரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நேற்றிரவு ஒடிசாவின், பலங்கிர் மாவட்டம்,  டிட்லாகார் என்ற ரயில் நிலையத்தில் ரயிலின் இன்ஜினை மாற்ற முற்பட்டனர். ரயிலின் இன்ஜினை அகற்றப்பட்டவுடன்  பெட்டிகள் மட்டும் தனியாக பிரிந்து ஓடியுள்ளது. ரயில்நிலையத்தில் இருந்த மக்கள் இன்ஜின் இல்லாமல் ரயில் பெட்டிகள் மட்டும் ஓடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ரயிலுக்குள் இருந்த பயணிகளிடம்  `அவசரச் சங்கிலியைப் பிடித்து இழுங்கள். ரயில் இன்ஜின் இல்லாமல் ஓடுகிறது.. இல்லையெனின் ரயிலில் இருந்து குதித்துவிடுங்கள்’ என்று ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் சத்தம் போட்டனர்.

ரயில் இன்ஜின் இல்லாமலேயே சுமார் 10 கிலோமீட்டர் தூரம்வரை ஓடியது. அதன்பின்னர் ரயில் தானாக வேகம் குறைந்து நகரத் தொடங்கியது. அதன்பின்னர் ரயில் தண்டவாளத்தில் கற்களைப் போட்டு ரயிலை நிறுத்தியுள்ளனர். சரிவான பாதை என்பதால் ரயில் வேகமாக ஓடியது. இன்ஜினை மாற்றும்போது ரயில் பெட்டிகளில் இருக்கும் தனிப்பட்ட பிரேக்குகளை பயன்படுத்தாதே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என்று ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜின் இல்லாமல் தானாக ஓடிய ரயில் சென்ற பாதையைச் சரி செய்து, மற்ற ரயில்களின் பாதையை மாற்றி விபத்தை தவிர்த்ததாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க ரயில்வே பணியாளர்கள் சிலரின் அலட்சியத்தால் நடந்துள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது இந்தச் சம்பவத்துக்கு காரணமான 7 ரயில்வே பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்ஜின் இல்லாமல் ரயில் பெட்டிகள் ஓடிய காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!