வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/04/2018)

கடைசி தொடர்பு:07:44 (09/04/2018)

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் அருகே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் அருகே பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தற்கொலைக்கு முயன்ற பெண்

Photo Credit: ANI

யோகி ஆதித்யநாத்தின் லக்னோ இல்லம் முன்பாக தீக்குளிக்க முயன்ற பெண்ணை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்துக் காப்பாற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் உன்னாவோ தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏவான குல்தீப்சிங் செங்கர் என்பவர், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுதொடர்பாக தொடர்ச்சியாக புகார் அளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து பேசிய அந்த பெண், `பாலியல் வன்கொடுமை தொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால், எங்கள் குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றசாட்டுகள் அனைத்தும் தன்னைப் பலிகடாவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப்சின் செங்கர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக லக்னோ போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.