வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/04/2018)

கடைசி தொடர்பு:22:30 (08/04/2018)

பெங்களூரு வாக்காளர்களைக் கவர `ஆம் ஆத்மி’ ஸ்டைலைப் பின்பற்றிய ராகுல்!

பெங்களூரு வாக்காளர்களைக் கவர `ஆம் ஆத்மி’ ஸ்டைலைப் பின்பற்றிய ராகுல்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மெட்ரோ ரயில் பயணம், நகரின் முக்கிய வீதிகளில் வாக்கிங் மற்றும் சாலையோரக் கடையில் குல்ஃபி ஐஸ் என ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசார யுக்தியைக் கடைபிடித்தார். 


கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் தேர்தல் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் மக்களைச் சந்தித்தும், பொதுக்கூட்டங்களில் உரையாற்றியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தலைநகர் பெங்களூருவில் இன்று அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஏ.சி.வேணுகோபால், மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரா மற்றும் மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் கௌடா ஆகியோருடன் பெங்களூருவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.   

இந்த பயணத்தின் போது வி.வி.ஐ.பி. பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியே வந்த ராகுல் காந்தி, விதான் சௌதாவிலிருந்து எம்.ஜி.ரோட் பகுதிவரை மெட்ரோ ரயிலில் பயணித்தார். பின்னர், பெங்களூருவின் முக்கிய வீதிகளில் வழியாக நடந்துசென்று மக்களைச் சந்தித்த ராகுல், சாலையோரம் இருந்த ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றில் குல்ஃபி ஐஸ் வாங்கி சாப்பிட்டார். மேலும், பெங்களூரு நகரின் முக்கிய புத்தக விற்பனை நிலையமாகக் கருதப்படும் `புக் வார்ம்’ புத்தக நிலையத்திற்குச் சென்றார். பெருமாள் முருகன் எழுதிய `தி கோட் தீஃப்’ மற்றும் கரன் ஆம்ஸ்ட்ராங் எழுதிய `ஏ ஹிஸ்டரி ஆஃப் காட்’ உள்ளிட்ட 7 புத்தகங்களை ராகுல் காந்திக்காக, சித்தராமையா வாங்கியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி தேர்தலின்போது மக்களை நேரடியாகச் சந்தித்து வீதிகளில் பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் ஸ்டைலை ராகுல் கடைபிடித்து வருகிறார்.