வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (10/04/2018)

கடைசி தொடர்பு:11:52 (10/04/2018)

பாரத் பந்த் எதிரொலி! - வடமாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் காவலர்கள்

பாரத் பந்த் எதிரொலியாக, நாடு முழுவதும் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாரத் பந்த்

கடந்த சில தினங்களுக்கு முன், எஸ்.சி/எஸ்.சி சட்டம் தொடர்பான பிரச்னை நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்தது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் அரசு அதிகாரிகளை உடனடியாகக் கைதுசெய்யக் கூடாது. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க அனுமதி, நீண்ட விசாரணைக்குப் பின்னரே கைது போன்ற தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று நாடு முழுதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. வடமாநிலங்களில் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தால், 10 பேர் வரை உயிரிழந்தனர்.

எஸ்.சி/எஸ்.டி மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று நாடுமுழுவதும் (ஏப்ரல் 10) போராட்டம் நடத்த வேண்டும் என சில அமைப்பினர் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களின் பல இடங்களில், குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களின்மூலம் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதால், பல இடங்களில் நேற்று மாலை முதல் இன்று மாலை வரை இணையதளச் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பீகாரில் ரயிலை மறித்து சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல இடங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  பாரத் பந்த் எதிரொலியாக,  நாடுமுழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.