குழந்தை யாருடன் வளர வேண்டும் என்பதை அறிவியல்படி அணுகமுடியாது - கேரள உயர் நீதிமன்றம் விளக்கம்!

சமீபத்தில், விவாகரத்துக்குப்பின் குழந்தை வளர்ப்பில், தந்தையின் பங்கை அறிவியல் ரீதியாக அணுகிப் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரி கேரளாவைச் சேர்ந்த பத்து பேர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

குழந்தை யாருடன்  வளர வேண்டும் என்பதை அறிவியல்படி அணுகமுடியாது - கேரள உயர் நீதிமன்றம் விளக்கம்!

விவகாரத்து

ரு திருமண பந்தம் முறியும்போது, அதில் முதலில் பாதிக்கப்படுவது அந்த உறவிலிருக்கும் ஆணோ பெண்ணோ அல்ல; மாறாக, அந்த  உறவில் இருந்து உருவான பிஞ்சு உயிர்கள்தான்! பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில், தன் துணையுடன் ஏற்படும் கசப்பான அனுபவங்களையும், கருத்து வேறுபாடுகளையும் சகித்துக்கொண்டு வாழ்வதற்குக்  காரணம், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணித்தான்! இரு உயிரிலிருந்து உருவான அந்தக்  குழந்தைக்கு, அம்மாவின் அன்பு இல்லாமலோ அல்லது அப்பாவின் ஆதரவு இல்லாமலோ வளர்வது மனதளவில் பெரிதும் பாதிக்கும்! அது அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் என்ற அச்சம்  பெற்றோருக்கு இருக்கும்! 

ஆனால், “இனி நாம் சேர்ந்து வாழ முடியாது”, என ஒரு தம்பதியர் முடிவு எடுத்து, விவாகரத்து பெற்ற நிலையில், குழந்தை யாரிடம் வளர வேண்டும் என்பது இருவருக்குமே முடிவெடுக்க கடினமான ஒரு விஷயமாக இருக்கும். பொதுவாக, இந்த முடிவு அந்தக்  குழந்தையின் நலன் கருதி, நீதிமன்றம் முடிவெடுக்கும். அந்தக்  குழந்தை யாரிடம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்க நினைக்கிறதோ அதைக் கேட்டுத்  தெரிந்துகொண்டு, அந்தக்  குழந்தையின் குடும்பப் பின்னணியை அலசி ஆராய்ந்து, தாயிடமோ தந்தையிடமோ  ஒப்படைக்கப்படும். மற்றொருவர், அந்தக்  குழந்தையை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பாதுகாவலர்கள் மற்றும் வார்டுஸ் (Guardians and Wards Act) சட்டப்படி, “குழந்தை அணுகுதல் மற்றும் பார்வையிடம் வழிகாட்டுதல்கள்” (Child access & vistation Guidelines), கூறும் விதிகளின்  அடிப்படையில் சந்தித்துக்கொள்வார்கள். 

விவாகரத்து

இத்தகைய வழக்குகளில், குழந்தையின் நலன் கருதி, பெரும்பாலான குழந்தைகள்  தாயிடமே ஒப்படைக்கப்படும். சமீபத்தில், இந்த வழிமுறைகளில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும், பல கோணங்களிலிருந்து  பார்க்கத் தவறவிடுவதாகவும்,  குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கை அறிவியல்  ரீதியாக அணுகிப்  பரிசீலிக்க வேண்டும் என்று கோரி கேரளாவைச் சேர்ந்த பத்து பேர் கேரள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.  இவர்கள் அனைவரும் விவாகரத்தான, தங்களின் குழந்தைகளைப் பிரிந்து வாழும் தந்தையர்கள். இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் அறிவியல் ரீதியாக அணுகமுடியாது என்று கூறி, மனுவை நிராகரித்துள்ளது. 

நீதிபதி அண்டனி  டொமினிக் (Antony Dominic) மற்றும் நீதிபதி டாமா சேஷாத்திரி நாயுடு (Damaa  Seshadri Naidu) தலைமையில் நடந்த அமர்வில், ``கணவன் - மனைவி விவாகரத்து  ஆன பிறகு,  குழந்தை யாரிடம் வளர்வது என்ற கேள்வி எங்கெல்லாம் எழுகிறதோ, குழந்தையின்  நலத்தைக் கருத்தில்கொண்டு நீதிமன்றம்தான் முடிவெடுக்கும். இதுபோன்ற வழக்குகளில், சட்டத்தை மட்டுமே கருத்தில்கொள்ளாமல் குழந்தை மற்றும் குடும்பத்தின் சூழ்நிலையைக்  கருத்தில்கொள்ள வேண்டும் என்று பல தருணங்களில் உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. இந்த அதிகாரத்தை ஏதேனும்  ஒரு குறிப்பிட்ட அளவுகோல் வைத்து அளந்து, சட்டம் உருவாகவேண்டுமானால், அதை உருவாக்க நீதிமன்றங்கள்தான் முன்னெடுத்துச் செயல்பட வேண்டும். அதனால், இதை அறிவியல் அடிப்படையில் அணுகமுடியாது'' என்று விளக்கம் அளித்து, மனுவை நிராகரித்துள்ளது. 

விவாகரத்து

விவாகரத்துக்குப் பிறகான குழந்தை வளர்ப்பு என்பது, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இதேபோன்ற சட்ட விதிமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. பொதுவாக, அங்கு குழந்தை வளர்ப்பை பொறுத்தவரையில், விவாகரத்து ஆனவுடனே நீதிமன்றங்கள் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை. பெற்றோரால் ஒரு முடிவுக்கு வர இயலாதப் பட்சத்தில் மட்டுமே,  நீதிமன்றம் முடிவெடுக்கும். பெரும்பாலான நாடுகளில், அந்தக் குழந்தையின் விருப்பத்தையே முதன்மையாகக் கொண்டு இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிட்டத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!