`காவிரி விவகாரத்தில் பெயர் முக்கியமல்ல செயல்தான் முக்கியம்’ - மத்திய நீர்வளத்துறை செயலாளரின் அடடே விளக்கம் | Name is not important in the Cauvery issue says PU Singh

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (10/04/2018)

கடைசி தொடர்பு:14:43 (10/04/2018)

`காவிரி விவகாரத்தில் பெயர் முக்கியமல்ல செயல்தான் முக்கியம்’ - மத்திய நீர்வளத்துறை செயலாளரின் அடடே விளக்கம்

'காவிரி தொடர்பான விவகாரத்தில் பெயர் முக்கியமல்ல; மத்திய அரசு என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம்' என மத்திய நீர்வளத்துறை செயலாளர் பி.யூ. சிங் தெரிவித்துள்ளார்.

பி.யூ சிங்

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே பல போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியும், இதற்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை. கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 177.24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்; ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

தீர்ப்பு வழங்கி ஆறு வாரங்கள் நிறைவடைந்தும், இன்னும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. முன்னதாக அறிவித்திருந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த 'ஸ்கீம்' என்ற வார்த்தையின் விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 'ஸ்கீம்' என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை. இதுபற்றி தற்போது எந்தக் கருத்தும் கூற முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங்,  “காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் எது சிறந்ததோ, அதை மத்திய அரசு கண்டிப்பாக நிறைவேற்றும். இந்த விவகாரத்தில், இரு மாநிலங்களும் தங்களுக்கான தேவைகளை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் மத்திய அரசு, இதை கூட்டாச்சி அடிப்படையில் பார்க்கிறது. காவிரி வாரியமோ, திட்டமோ எதுவாக இருந்தாலும், அதற்குப் பெயர் முக்கியமல்ல; செயல்பாடுகள்தான் முக்கியம். தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஸ்கீம் வகுக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது” எனக் கூறினார்.


[X] Close

[X] Close