Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கதைசொல்லிகள் உலகத்தை மாற்றுவார்கள்... ஃபோர்ப்ஸ் 30 இளைஞர்களின் வின்னிங் ஃபார்முலா!

பல நூறு வெற்றிக் கதைகளை, வெற்றியாளர்களின் கனவை, கண்ணீரை, அனுபவத்தைத் தேடித் தேடி மக்களிடம் சேர்க்கிறது `ஜோஷ் டாக்ஸ்' நிறுவனம். ஜோஷ் டாக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான சுப்ரியா பாலின் குரலிலும் குறையாத ஜோஷ் (உற்சாகம்) இருக்கிறது.

இந்தியாவின் முதன்மையான 50 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று `ஜோஷ் டாக்ஸ்'. 2018-ம் ஆண்டின் `ஏஷியா 30 அண்டர் 30’ இளைஞர்களில் முக்கிய இருவர் ஷோபித் பங்காவும், சுப்ரியா பாலும்.

``எப்படி இது சாத்தியமானது?'' என்ற கேள்விக்கு, சுப்ரியா பால் பதிலளித்தார்.

``என் நண்பர்கள் பலரும் சி.ஏ படித்துக்கொண்டிருந்ததால் நானும் சி.ஏ படித்துக்கொண்டிருந்தேன். `வாழ்க்கையில் செய்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், மற்றவர்களைப் பார்த்து எல்லாவற்றையும் காப்பியடித்துக்கொண்டிருக்கிறோம்' என அடிக்கடி எனக்குத் தோன்றும். இந்த எண்ணத்தை வெளிப்படுத்த எனக்கு எந்த வடிகாலும் இல்லை. அப்போதுதான் ஒரு பார்ட்டியில் ஷோபித்தைச் சந்தித்தேன். அறையின் மூலையில் தனியாக நின்றுகொண்டிருந்தார். பேசத் தொடங்கினோம். மாணவர்களின் எண்ணங்களை, அவர்களின் உலகை விரிவாக்குவதைக் குறித்து பேசத் தொடங்கினார். எங்கள் இருவரின் கனவும் ஒன்றாக இருந்ததை அப்போதுதான் கண்டுபிடித்தேன்.

விரும்பிய விஷயங்களைப் படிக்கவும், அதையே தொழிலாகவும் மாற்றிக்கொள்ள, மாணவர்களை உந்தித்தள்ளுவதுதான் எங்களின் கனவு. அதற்கு இருவரும் சேர்ந்தே வடிவம் கொடுத்தோம். மாணவர்களுக்கும் இளம் தொழில்முனைவோருக்கும் டானிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, `ஜோஷ் டாக்ஸ்’ என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 2013-ம் ஆண்டில் தொடங்கினோம்.''

josh talks கதைசொல்லி

குடும்பத்தின் ஒத்துழைப்பைப் பற்றிக் கேட்டபோது, ``அப்பாவுக்கு இதில் கொஞ்சமும் ஆர்வமில்லை. எனக்காக ஒப்புக்கொண்டாலும், நான் படிப்பைக் கைவிட்டதில் அப்பாவுக்குப் பெரிய வருத்தம். ஜோஷ் டாக்ஸின் முதல் நிகழ்ச்சியில் தொடக்கம் முதல் இறுதி வரையில் கொஞ்சமும் கவனம் சிதறாமல் இருந்தார் அப்பா. நிகழ்ச்சி முடிந்ததும் அப்பா என்னைப் பார்த்த அந்தப் பெருமை நிறைந்த பார்வை இப்போதும் நினைவில் இருக்கிறது. நான் உயர் நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்தவள். அதனால், இப்போது அடைந்திருக்கும் உயரத்தில் எந்த அதிசயமும் இல்லை.

ஷோபித் பங்காவின் வளர்ச்சி இன்னும்கூட பெரியது. 15 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, சைக்கிளிஸ்ட் ஆக வேண்டும் என்பதற்காக பெங்களூருவுக்குச் சென்றவர் ஷோபித். `ஸ்பெஷலைஸ்டு' நிறுவனத்தின் புகழ்பெற்ற சைக்கிளிஸ்ட்டில் ஒருவராக மாறினார். வீட்டிலிருந்து படித்துக்கொண்டே தேர்ந்த சைக்கிளிஸ்ட்டாக இருந்த அவரை, குடும்பத்தின் பிரச்னைகள், மீண்டும் சொந்த ஊரான டெல்லிக்கு அழைத்துக்கொண்டன. கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டே படித்துக்கொண்டிருக்கும்போதுதான் நாங்கள் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சைக்கிளிங் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது சைக்கிளை விற்று என் முதலீட்டுக்குத் துணைபுரிந்தவன் அவன். ஷோபித் நம்பிக்கையின் ஊற்று” என்றார்.                                                                                                                        கதைசொல்லி

``TED டாக்ஸுக்கும், Josh டாக்ஸுக்கும் என்ன வித்தியாசம்?''

``TED டாக்ஸைப் பொறுத்தவரை, வெற்றியாளர்கள் தங்களின் அனுபவங்களை, சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் களமாக இருக்கிறது. ஏற்கெனவே பல விஷயங்களையும் சாதித்தவர்கள் பேசுகிறார்கள். எல்லா வயதினருக்குமான விஷயங்களைப் பேசுவதற்காக பல பிரபலங்களும் அழைக்கப்படுகிறார்கள்.

எங்களுடைய டார்கெட் இளைஞர்கள். தொழிலா... படிப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் மாணவர்களையும் இளைஞர்களையும் தெளியவைப்பதற்கான முயற்சி எங்களுடையது. நாங்கள் அவர்களை நோக்கி மட்டுமே உழைக்கிறோம். இளைஞர்களுக்குத் தேவையான விஷயங்களை, அவர்களுக்கேற்ற மொழியில் பேசவைப்பதுதான் எண்ணம். இந்த வருடம் ஜோஷ் டாக்ஸில் செய்யும் மாற்றம் தனித்துவமானதாக இருக்கப்போகிறது. 

தொடக்கத்தில், நானும் ஷோபித்தும் முக்கியமானவர்கள் பலரைப் பின்தொடர்ந்து போனோம். தொல்லை கொடுத்தோம். இப்போது TED-ஐப்போலவே எங்களுக்கும் அங்கீகாரம் இருக்கிறது. கதைசொல்லிகள்தான் உலகத்துக்கு எல்லா விஷயங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என நம்புகிறோம். தவறுகளையும் முயற்சிகளையும் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களையும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லவைப்போம். ஜோஷ் கதைசொல்லிகள், பலருடைய வாழ்க்கையை மாற்ற காத்திருக்கிறார்கள்” என்கிறார் ஃபோர்ப்ஸ் கேர்ள் சுப்ரியா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement