உன்னாவோ பாலியல் வன்கொடுமை வழக்கு: பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் சகோதரர் கைது! | The brother of UP MLA was arrested in murder case

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (11/04/2018)

கடைசி தொடர்பு:08:40 (11/04/2018)

உன்னாவோ பாலியல் வன்கொடுமை வழக்கு: பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் சகோதரர் கைது!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டம் பங்கரோ தொகுதி எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டப்பட்ட  வழக்கில் தற்போது சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவோ மாவட்டத்தில் உள்ள பங்கரோ தொகுதி எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்ட  வழக்கில், தற்போது சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமை

கடந்த ஞாயிறன்று, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தின் முன்பு, ஒரு பெண் தீக்குளிக்க முயன்றார். மாநிலத்தை ஆளும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவரான உன்னாவோ மாவட்டத்தின் பங்காரோ தொகுதி எம்.எல்.ஏ., செங்கர், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, அந்தப் பெண் தீக்குளிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, குற்றம் சாட்டிய பெண்ணின் வீட்டுக்குச் சென்ற எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், பெண்ணின் தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், எம்.எல்.ஏ-வின் தம்பி அனில்சிங் தலைமையில்தான்  நடந்துள்ளது. 

ஆனாலும், ஆயுத வழக்கில் பெண்ணின் தந்தை பப்புசிங், சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் திடீரென உயிரிழந்தார்.  பப்புசிங் உயிரிழந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ-வின் சகோதரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார், அவர்மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக்  காவல்துறையினர் தெரிவித்தனர். பப்புசிங்கின் உடற்கூறு  ஆய்வு அறிக்கையில், அவரது உடலில் 14 இடங்களில் காயம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், நீதிமன்றக் காவலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இறந்ததுகுறித்து 24 மணிநேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உ.பி டி.ஜி.பி-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில், சி.பி.ஐ விசாரணை தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஆதித்யநாத், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.