வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (11/04/2018)

கடைசி தொடர்பு:09:57 (11/04/2018)

குடும்பப் பெண்... புரட்சிப் பெண்... காந்தியின் உற்றத் துணை... கஸ்தூரிபா காந்தி! #KasturbaGandhi

`தனக்கென தனித்த வாழ்க்கை ஏதுமில்லை; கணவரின் வாழ்க்கையே தன் வாழ்க்கை' என்ற நிலைப்பாட்டுடன் கணவரின் நிழலாக வாழ்ந்து மறைந்தார், கஸ்தூரிபா.

கஸ்தூரிபா காந்தி

காத்மா காந்தியின் உற்ற வாழ்க்கைத் துணை, கஸ்தூரிபா காந்தி. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 'குடும்பப் பொறுப்பு பெண்களுக்கானது' என்ற கூற்று மிக வலுவாக இருந்தது. அப்போது, குடும்ப நிர்வாகத்தைச் சிறப்புடன் நடத்தியவர், பொது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் வீதியில் இறங்கி துணிச்சலுடன் போராடி, இன்னல்கள் பல அனுபவித்த புரட்சிப் பெண், கஸ்தூரிபா காந்தி பிறந்த தினம் (11.4.1869) இன்று.

கஸ்தூரிபா

காந்திகுஜராத் மாநிலம் போர்பந்தரில், 1869-ம் ஆண்டில் பிறந்தவர் கஸ்தூரிபா. வணிகக் குடும்பம். படிப்பறிவு இல்லை. திருமணத்துக்கு முன்புவரை, வெகுளியான கிராமத்துப் பெண்ணாக வளர்ந்தார். கஸ்தூரிபாஅப்போதெல்லாம் போராட்டச் சூழல் பற்றி எதுவும் அறியாதவராக இருந்தார்.

1883-ம் ஆண்டு, குடும்ப உறவினரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைக் கரம் பிடிக்கிறார். அப்போது வயது 13. கணவர் மகாத்மா காந்திக்கு வயது 14. கணவரிடம் இருந்து பொது வாழ்க்கைக்கான விஷயங்களை நாள்தோறும் கற்றுக்கொண்டார்.

பொதுவாழ்வில் தீவிர ஈடுபாடு செலுத்தினார் காந்தி. எனவே, குடும்ப பொறுப்புகள் முழுவதையும் கஸ்தூரிபா கவனித்துக்கொண்டார். இவர்களுக்கு ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ் என நான்கு பிள்ளைகள். 

1904 - 1914-ம் ஆண்டுவரை, காந்தியும் கஸ்தூரிபாவும் தென் ஆப்பிரிக்காவில் வசித்தனர். அங்கு நிலவிய நிறவெறிக் கொடுமை மற்றும் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களுக்கு எதிராக காந்தி முன்னெடுத்த போராட்டங்களில், கஸ்தூரிபாவும் தோளோடு தோளாக நின்றார். 

தனியாகவும் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த கஸ்தூரிபா, மக்களின் உரிமைகளுக்கு வலுவாகக் குரல் எழுப்பினார். இதனால், சிறைவாசமும் அனுபவித்தார். அதற்காக ஒருபோதும் அவர் வருத்தப்படவும் இல்லை; கலங்கவும் இல்லை.

1915-ம் ஆண்டு, காந்தியும் கஸ்தூரிபாவும் தாய்நாடு திரும்பினர். இந்திய சுதந்திரப் போராட்டங்களில், காந்திக்கு முழு ஆதரவு கொடுத்தார், கஸ்தூரிபா. கணவர் கற்றுக்கொடுத்த படிப்பறிவும், உரிமைகளுக்கான போராட்ட வாழ்வும் இவருக்குள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏராளமான பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கற்றுக்கொடுத்தார்.

நுரையீரல் பாதிப்பால் வாழ்நாள் முழுக்க சிரமப்பட்டார் கஸ்தூரிபா. ஆனாலும், பொது வாழ்விலும் குடும்பத்தினர் நலனிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார். வாழ்நாள் முழுக்க எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.

காந்தி

சபர்மதி ஆசிரமச் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும், கணவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அங்கு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். ராட்டைச் சுற்றும் தொழில் செய்தார். இப்படிக் குடும்பப் பொறுப்பு மற்றும் பொது வாழ்வு இரண்டிலும் சமரசம் இன்றி கவனம் செலுத்தினார்.

1942-ம் ஆண்டு, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் காந்தி உள்ளிட்ட பல போராட்ட வீரர்களுடன் கஸ்தூரிபாவும் கைதானார். 1944-ம் ஆண்டு, சிறைவாசக் காலத்திலேயே நோய் தீவிரத்தால் மரணம் அடைந்தார்.

மகாத்மா காந்தி, தனது 'சத்திய சோதனை' நூலில், மனைவியின் நினைவுகளை மிக உருக்கமாக எழுதியுள்ளார். அதில், தன் வாழ்வில் உற்ற துணையாக இருந்த மனைவியின் பக்கபலம் பற்றியும் அவரது இழப்பின் தவிப்பு பற்றியும் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார்.

`தனக்கென தனித்த வாழ்க்கை ஏதுமில்லை; கணவரின் வாழ்க்கையே தன் வாழ்க்கை' என்ற நிலைப்பாட்டுடன் கணவரின் நிழலாக வாழ்ந்து மறைந்தார், கஸ்தூரிபா. பொது வாழ்வில் பல இன்னல்களை காந்தி எதிர்கொண்டபோதெல்லாம், அதற்கு மருந்தாக இருந்தவர் கஸ்தூரிபா என்றால் மிகையாகாது.


டிரெண்டிங் @ விகடன்