கர்நாடகத்தில் அதிருப்தி பி.ஜே.பி-யினர் தனித்துப் போட்டி? காங். முதல் வேட்பாளர் பட்டியல்! | Dissent in Karnataka BJP over candidate's list; Congress released its first list!

வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (11/04/2018)

கடைசி தொடர்பு:11:44 (11/04/2018)

கர்நாடகத்தில் அதிருப்தி பி.ஜே.பி-யினர் தனித்துப் போட்டி? காங். முதல் வேட்பாளர் பட்டியல்!

மோடியுடன் அமித் ஷா - கர்நாடகத் தேர்தல்

ர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிடும் 72 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அண்மையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது கர்நாடக பி.ஜே.பி-யினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைக்கு மே 12-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், இரு கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, இரு தினங்களுக்கு முன்பு 72 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பி.ஜே.பி-யிலிருந்து வெளியேறி அண்மையில் தேர்தலை முன்னிட்டு, மீண்டும் கட்சியில் இணைந்த பி.ராஜீவ், ஏ.எஸ். பாட்டீல் நடஹள்ளி, பசவன கவுடா பாட்டீல், மல்லிகய்யா குட்டேதார், மல்லிகார்ஜூன் குபா, டாக்டர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உள்பட அண்மையில் பி.ஜே.பி-யில் இணைந்த 11 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பி.ஜே.பி. கொடிபி.ஜே.பி-க்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளுக்கே முதல் பட்டியலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவிர, கட்சியின் முதல்வர் பதவிக்கான வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பா, முக்கியத் தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், கே.எஸ். ஈஸ்வரப்பா ஆகியோருக்கும் முதல் பட்டியலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

யாரும் எதிர்பாராதவிதமாக சுரங்க முறைகேட்டில் தொடர்புடைய ஜனார்த்தன் ரெட்டிக்கு நெருக்கமானவரான மக்களவை உறுப்பினர் பி.ஶ்ரீராமுலுவுக்கு சித்ரதுர்கா மாவட்டம் மோல்கல்முரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 72 பேர் பட்டியலில் 3 பேர் பெண்கள். மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் எடியூரப்பா தலைமையில் 150 இடங்களில் பி.ஜே.பி. வெற்றிபெறும் என்று அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும், அகில இந்திய தலைமை தன்னிச்சையாக முடிவெடுத்து, வேட்பாளர்களை அறிவித்துள்ளதாக கர்நாடக மாநில பி.ஜே.பி-யினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மாநில பி.ஜே.பி. நிர்வாகிகள் அடங்கிய குழு அளித்த பரிந்துரைகளை மத்திய தலைமை புறக்கணித்திருப்பதாக அவர்கள் குறைகூறியுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பி.ஜே.பி-யில் இணைந்த மல்லிகய்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மாநில பி.ஜே.பி-யினர் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக பி.ஜே.பி-யில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அதிருப்தியாளர்கள் அதிகாரபூர்வ பி.ஜே.பி. வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிங்காயத்துகளுக்கும், மற்றொரு பெரும்பான்மை சமூகத்தினருக்கும் இடையேயான மோதலை மேலும் தூண்டிவிடும் வகையில் பி.ஜே.பி. செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தவிர, பெங்களூருவில் தற்போது எம்.எல்.ஏ-க்களாக உள்ள அனைவருக்கும் பி.ஜே.பி.சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சின்னம் - கை 2003-ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் எடியூரப்பா தனிக்கட்சியாக தேர்தல் களத்தில் போட்டியிட்டார். ஶ்ரீராமுலுவும் தனி அணியாகப் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை இருவரும் பி.ஜே.பி-யில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் மற்றொரு முக்கியக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 126 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் 130 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருவதால், கர்நாடக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்