வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (11/04/2018)

கடைசி தொடர்பு:11:43 (11/04/2018)

நாடாளுமன்றத்தை முடக்கியதைக் கண்டித்து பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம்!

நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கியதைக் கண்டித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க எம்.பி-க்கள் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளனர்.

மோடி

பிப்ரவரி 1-ம் தேதியன்று மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மார்ச் 5-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு தொடங்கியது. இந்த அமர்வு தொடங்கியதிலிருந்து ஒரு நாள்கூட கூட்டம் முழுமையாக நடக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். அ.தி.மு.க எம்.பி-க்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் வெளியே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். எம்.பி-க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் அலுவல்கள் முற்றிலும் தடைப்பட்டதாகப் பா.ஜ.க  குற்றம்சாட்டிவந்தது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசிய மோடி நாடாளுமன்ற முடக்கத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் எனக் குற்றம் சாட்டினார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 12-ம் தேதி பா.ஜ.க எம்.பி-க்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் நாளை நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க எம்.பி-க்கள் அவரவர் தொகுதிகளில் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். மோடி தனது அன்றாட அலுவல் பணிகள் எதுவும் தடைப்படாமல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகப் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ள இந்த நிலையில்,  ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை காண நாளை அவர் தமிழகம் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.