`ஷாஜகான் கையெழுத்திட்ட ஆவணம் இருக்கிறதா?' - இஸ்லாமிய அமைப்பிடம் கேள்விகேட்ட உச்ச நீதிமன்றம்!

தாஜ்மஹால், வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானதுதானா என்பதை நிரூபிப்பதற்கு முஹலாய மன்னன் ஷாஜகான் கையெழுத்திட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாஜ்மஹால், வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானதுதானா என்பதை நிரூபிக்க, முஹலாய மன்னன் ஷாஜகான் கையெழுத்திட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக எழுப்பிய தாஜ்மஹாலை உத்தரப்பிரதேசத்தின் வக்ஃப் வாரியம் என்ற இஸ்லாமிய அமைப்பு உரிமை கோரிவருகிறது. இதை எதிர்த்து, இந்திய தொல்லியல் துறை 2010-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  நடந்துவரும் இந்த வழக்கு, நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தாஜ்மஹால்

விசாரணையின்போது வக்ஃப் வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம், "இந்தியாவில் முஹலாயர்களின் ஆட்சிக்குப் பிறகு, தாஜ்மஹால் உள்ளிட்ட பாரம்பர்யக் கட்டடங்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. சுதந்திரம் பெற்ற பிறகு அனைத்து பாரம்பர்ய கட்டடங்களும் இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் வந்தன’’ என்று நீதிபதிகள் கூறினர்.

 வழக்கறிஞர் பேசும்போது, "ஷாஜகான் தாஜ்மஹாலை வக்ஃப் வாரியத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார்’’ என்றார்.

தொல்லியல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "ஷாஜகான் எழுதிக்கொடுத்ததாகச் சொல்லப்படும் ஆவணம் எதுவுமில்லை’’ என்று வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், `ஷாஜகானுக்கும், அவரது மகன் ஒளரங்கஸீப்புக்கும் ஏற்பட்ட மோதலில், தந்தையை 1658-ம் ஆண்டு ஆக்ரா சிறையில் அடைத்தார், அவரது மகன். 1666-ல் சிறையிலேயே மரணமடைந்தார் ஷாஜஹான். பின்னர், எப்படி அவர் கையெழுத்திட்டிருக்க முடியும்? அப்படி ஒரு ஆவணம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினர்.

வக்ஃப் வாரிய வழக்கறிஞருக்கு கால அவகாசம் கொடுத்து, வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!