``காலம் நம்மை மன்னிக்காது” - தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கடிதம்

`நிலுவையிலுள்ள நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் காலம் நம்மை மன்னிக்காது' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

குரியன் ஜோசப்

உத்ரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு, உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த ஜனவரி 10-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு இதுவரையில் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் 22 பேருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரைகளை மூன்று மாத காலமாகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்திய வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் இதுவரையில் நடைபெறாத ஒன்று. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு உச்ச நீதிமன்றம் சரியான எதிர்வினையாற்றாவிட்டால், காலம் ஒருபோதும் நம்மை மன்னிக்காது. 

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கி நீதிபதிகள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்தியாவில் முதன்முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாத கால தாமதம் ஆவதற்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. சுகப் பிரசவம் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென்றால் அதற்குத் தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை கருவிலேயே இறந்துவிடும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நீதிபதி குரியன் ஜோசப் அளித்த பேட்டியில், 'இது மிகவும் மோசமான நிலைமை. உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து யாருமே கவலை கொள்வது இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!