வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (13/04/2018)

கடைசி தொடர்பு:13:58 (13/04/2018)

ஒரு பக்கம் உண்ணாவிரதம்.. மறுபக்கம் சாண்ட்வெஜ், சிப்ஸ்! - பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் அட்ராசிட்டி

நேற்று நடைபெற்ற பா.ஜ.க-வின் உண்ணாவிரதப் போராட்டத்தில் மகாராஷ்ட்ரா எம்.எல்.ஏ-க்கள் இருவர் சிற்றுண்டி சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

பாஜக

Photo Credit : Twitter

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பட்ஜெட் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர எம்.பி-க்களும் நிரவ் மோடி ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி-க்களும் என ஆளுக்கொரு பிரச்னையைக் கையில் எடுத்து நாடாளுமன்றம் நடைபெற்ற ஒரு மாதகாலமும் ஒரு நாள் விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கி அலுவல் வேலைகள் எதுவும் நடைபெறவில்லை.

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதைக் கண்டித்து பா.ஜ.க நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து அதன்படி அனைத்து மாநிலத்தில் உள்ள பா.ஜ.க எம்.பி-க்களும் தங்களின் மாநிலங்களில் உண்ணாவிரதம் இருந்தனர். இதேபோன்று மகாராஷ்ட்ராவின் புனேவில் அமைச்சர் கிரிஸ் பாபர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் நடுவே புனே கவுன்சில் ஹாலில் கிரிஸ் பாபர் ஒரு கூட்டத்தைக் கூட்டி அதில் ஜலியுட் சிவார் திட்டத்தின் மீதான வேலை மற்றும் விவசாயிகளுக்கு விதைகளை விநியோகம் செய்தல் போன்றவை குறித்து ஆலோசித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். அப்போது அனைவருக்கும் சிற்றுண்டி விநியோகிக்கப்பட்டது. அப்போது உண்ணாவிரதத்தை மறந்துவிட்டு மகாராஷ்ட்ராவின் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பீமிரோ டப்கிர் மற்றும் சஞ்சய் பீகேட் அலியாஸ் பாலா ஆகிய இருவரும் சாண்ட்வெஜ் மற்றும் சிப்ஸ் சாப்பிட்டனர். இது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு, பேசிய அந்த எம்.எல்.ஏ-க்கள் எப்போதும் நடக்கும் கூட்டத்தின் நினைவில் இந்தச் சிற்றுண்டியைச் சாப்பிட்டதாக விளக்கமளித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் நடுவே பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சிற்றுண்டி உண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவிவருகிறது. எம்.எல்.ஏ-க்களின் இந்தச் செயல் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ.க உண்ணாவிரதம் என்று நாடகம் நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.