காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் மோடி மெளனம் காப்பது ஏன்? - தேசம் முழுவதும் எழுந்த எதிர்ப்புக் குரல்

ஆசிஃபா, உனா

`உனா’ `கத்துவா’ பகுதிகளில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் சீற்றம் அதிகரித்து வருகிறது.

அசிஃபாவின் தாயார்
 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி  மேய்ச்சலுக்குச் சென்ற தன் குதிரைகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றார். குதிரைகள் வீடு திரும்பிவிட்டன. அவள் வீடு திரும்பவில்லை. ஜனவரி மாதம் 10-ம் தேதி காணாமல் போன சிறுமி, ஜனவரி 17-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.  அவள் கடத்தப்பட்டு, மயக்கமருந்து கொடுத்து, கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது. இந்தச் சம்பவம் சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல, உத்தரப்பிரதேசம் உனா நகரில், பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரும் அவரது கூட்டாளிகளும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மைனர் பெண் ஒருவர் புகார் அளித்தார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், அந்தப் பெண் தன் குடும்பத்தினருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் தீக்குளிக்க முயன்றார். காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அந்தப் பெண்ணின் தந்தையைக் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் விசாரணையின்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  பா.ஜ.க எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ குல்தீப் சிங்

 `பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையைக் காவலில் எடுத்து விசாரிக்க என்ன காரணம்? அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது’ என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து உத்தரப்பிரதேச அரசு இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது. இந்த வழக்கில் நேற்று புதிய திருப்பம் ஏற்பட்டது. பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சிலரின் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தேசியளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. 

ராகுல் காந்து
 

இந்த இரண்டு சம்பவங்களிலும் பா.ஜ.க அரசு செயல்படாமல் இருந்ததாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் பேரணி நடத்தினார். உறங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்புவதற்கே இரவில் இந்தப் பேரணியை நடத்துவதாகப் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்    `சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். `உனா’ `கத்துவா’  சம்பவங்களில் சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அரசியல், திரைப்பிரபலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  டெல்லி, மும்பை, கொல்கத்தா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.  இந்த சம்பவங்கள் தொடர்பாக எதுவும் பேசாமல், பிரதமர் மோடி மெளனம் காத்து வருவதாக நெட்டிசன்ஸ் குற்றம்சாட்டி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!