`புகைப்படம் எடுக்கும் நேரமா இது?' - பத்திரிகையாளர்களிடம் சீறிய பிரியங்கா காந்தி

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி பத்திரிகையாளர்களின் செயலால் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ப்ரியங்கா காந்தி

காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற மாவட்டத்தில் 8 வயது சிறுமியை சிலர் கடத்தி, மயக்கமருந்து கொடுத்து, கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவோ பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ உள்ளிட சிலர் 18 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த இரு வன்கொடுமை சம்பவங்களும் கடந்த சில தினங்களாக பூதாகரமாக வெடித்துள்ளன.

இந்தச் சம்பவங்களைக் கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நள்ளிரவில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவத்தி ஏந்திப் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினார். இந்தப் பேரணியில் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர். 'தூங்கிக்கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பவே நள்ளிரவில் போராட்டம் நடத்துகிறோம்' என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினார்கள்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்களும் பத்திரிகையாளர்களும் சத்தமிட்டுக்கொண்டு ஆரவாரம் செய்தனர். இதனால் கோபமடைந்த பிரியங்கா காந்தி சத்தமிடுபவர்களைக் கடுமையாகச் சாடினார். பிறகு அவர் பத்திரிகையாளர்களை நோக்கி, “ நாம் ஏன் இங்கு கூடியிருக்கிறோம் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள், ஏன் இப்படி ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு இருக்கிறீர்கள், புகைப்படம் எடுக்கும் நேரமா இது. தயவுசெய்து அனைவரும் அமைதியாக வாருங்கள். இல்லையேல் அங்கு ஓரமாகப் போய் நில்லுங்கள்.” எனக் கோபமாகப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!