வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (13/04/2018)

கடைசி தொடர்பு:17:47 (13/04/2018)

இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து ஏழாவது நாளாக ஏறுமுகம் 

இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து ஏழாவது நாளாக ஏறுமுகம் 

ஒரு கட்டத்தில் சிறப்பாக முன்னேறி நல்ல லாபங்களுடன் இருந்த இந்தியப் பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸும் நிஃப்ட்டியும், பின்னர் தடுமாறினாலும், விரைவிலேயே சுதாரித்து தொடர்ந்து ஏழாவது நாளாக இன்று பாசிட்டிவாக முடிந்தன.

ஒரு கட்டத்தில் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்த மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று இறுதியில் 91.52 புள்ளிகள் அதாவது 0.27 சதவிகிதம் லாபத்துடன் 34,192.65 என முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 21.95 புள்ளிகள், அதாவது 0.21 சதவிகிதம் உயர்ந்து 10,480.60-ல் முடிவுற்றது.

சிரியா மீது அமெரிக்கா விரைவிலேயே தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் ஓரளவு தணிந்ததன் காரணமாகவும், சற்று உற்சாகமூட்டக்கூடிய சில பொருளாதார அறிக்கைகள் காரணமாகவும் அமெரிக்கப் பங்குச் சந்தை நேற்று சிறிது முன்னேறியது.

இதைத் தொடர்ந்து, ஆசியாவின் சில சந்தைகள் ஏறுமுகம் கண்டன. இருப்பினும் சைனாவின் ஏற்றுமதி மார்ச் மாதம் எதிர்பாராதவிதமாக குறைந்ததாக வெளியாகியிருக்கும் அறிக்கை சீனச் சந்தைகளில் ஒரு தொய்வை ஏற்படுத்தியது.

ஐரோப்பாவின் முக்கியச் சந்தைகளில் ஒரு நிதானமான போக்கு தெரிகிறது. இதற்கு காரணம், இன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள சில பெரிய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் வெளியாகவிருப்பதுதான்.

காய்கறிகள் உட்பட்ட உணவுப் பொருள்களின் விலையிறக்கத்தால், இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் (Consumer Price Index கடந்த மார்ச் மாதத்தில் 4.28 சதவிகிதமாக குறைந்ததாக வந்த அறிக்கை சந்தையின் உற்சாக நிலைக்கு ஒரு காரணம். இது சென்ற வருடத்தின் மார்ச் மாத நிலையான 3.89 சதவிகிதத்தை விட அதிகமாக இருந்தாலும், பிப்ரவரி 2018-ன் 4.44 சதவிகிதத்தை விட சற்று குறைவே.

மேலும் இந்தியாவின் தொழில் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக 7.1 சதவிகிதம் வளர்ந்ததும் இன்றைய முன்னேற்றத்திற்கு ஒரு காரணம்.

இந்த வருடத்திய தென் மேற்குப் பருவ மழை 100 சதவிகிதம் நார்மலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களின் மன நிலையை ஓரளவு உற்சாகமாக வைத்திருக்க உதவியது எனலாம்.

இன்று வெளிவரவிருக்கும் இன்ஃபோஸிஸ் நிறுவன காலாண்டு நிதியறிக்கையும் தற்போதைய ஆண்டுக்கான வருமான எதிர்பார்ப்பு பற்றிய அறிக்கையும் நன்றாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு காரணம்.

மெட்டல் துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், பவர் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த சில பங்குகள் விலை உயர்ந்தன. கேப்பிடல் கூட்ஸ், வங்கி, எப்.எம்.சி.ஜி மற்றும் ஆயில் துறை பங்குகளின் விலைகளில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை.

இன்று விலை உயர்ந்த சில முக்கியப் பங்குகள் :

அதானி போர்ட்ஸ் 2.8%
டெக் மஹிந்திரா 2.8%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 2.5%
ஹின்டால்க்கோ 2.5%
இண்டியாபுல்லஸ் ஹௌசிங் பைனான்ஸ் 2.3%
விப்ரோ 2.1%
கோடக் பேங்க் 1.3%
Dr ரெட்டிஸ் 1.2%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.1%

விலை இறங்கிய பங்குகள் :

பாரத் பெட்ரோலியம் 3%
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 2%
பஜாஜ் பைனான்ஸியல் சர்வீசஸ் 1.6%
இந்தியன் ஆயில் 1.5%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 1.1%
ஸ்டேட் பேங்க் 1.1%


டிரெண்டிங் @ விகடன்