வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/04/2018)

கடைசி தொடர்பு:21:30 (13/04/2018)

`பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது!’ - பிரதமர் மோடி திட்டவட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி

Photo Courtesy: ANI

காஷ்மீரில் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவரால் வன்கொடுமை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பிரதமர் மோடி கருத்து கூறாதது குறித்தும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்தச் சம்பவங்களைக் கண்டித்து, டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடத்தினார்.

இந்தநிலையில், டெல்லியில் அம்பேத்கர் நினைவு இல்லத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, அந்த இரு சம்பவங்கள் குறித்தும் மௌனம் கலைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, ``கடந்த இரண்டு நாள்களாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் நாகரிக சமுதாயத்தின் அங்கமாக இருக்க முடியாது. இந்தச் சம்பவங்கள் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. நாட்டு மக்களுக்கு ஓர் உறுதிமொழியை நான் கொடுக்க விடும்புகிறேன். இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்ப முடியாது. நிச்சயமாக நீதி நிலைநாட்டப்படும். நம் மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்’ என்றார். பட்டியலின மக்களுக்கு பா.ஜ.க அரசு செய்த நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்ய காங்கிரஸ் கட்சி முயற்சி செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.