`இந்திய மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டவர் மோடி' -  கலகலத்த பட்நாவிஸ்!

`பிரதமர் மோடியை எதிர்க்கும் துணிச்சல் எதிர்க்கட்சிகளிடம் இல்லை' என மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். 

தேவேந்திர பட்நாவிஸ்

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதைக் கண்டித்து நேற்றுமுன்தினம் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மாநில முதல்வர்கள், எம்.பி-க்கள் என முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர். அதன்படி, மும்பை வில்லேபார்லேயில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  ``காங்கிரஸ் ஆட்சியில்தான் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்தது. பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடிதான் கொண்டுவந்தார். 

அவர்கள் வாழ்வை மேம்படுத்தத் தொழில் முனைவோர் திட்டத்தை மோடிதான் அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சியினர் இடையே இருக்கும் முரண்பாடுகளை மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ளனர். அவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு மட்டுமே அவர்கள் ஆசைப்படுகிறார்கள். பிரதமர் மோடியின் கொள்கை, திட்டங்களுக்கு மாற்றாக அவர்களிடம் எதுவும் இல்லை. பிரதமரை எதிர்கொள்ளும் துணிச்சல் எதிர்க்கட்சிகளிடம் துளியும் இல்லை. அதனாலேயே நாடாளுமன்றத்தை அவர்கள் முடக்குகிறார்கள். மோடி இந்திய மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டவர். மக்கள் அனைத்தையும் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!