வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (15/04/2018)

கடைசி தொடர்பு:12:29 (15/04/2018)

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு! - பாஜக எம்.எல்.ஏ-வுக்கு 7 நாள் சிபிஐ காவல் #UnnaoRapeCase

உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான உத்திரபிரதேச பாஜக எம்.எல்.ஏ-வுக்கு 7 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது.

உன்னாவ்

கடந்த வருடம் தனக்கு வேலை வாங்கித் தருமாறு உத்திர பிரதேசத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு சென்ற 17 வயது சிறுமி பாலியல் வன கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து அந்தச் சிறுமி பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீண்ட நாள்கள் போராடியும் எந்த ஒரு முடிவும் கிடைக்காத நிலையில் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உத்திரபிரதேச முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மீட்டனர். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின்போது சில நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் பிறகு இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. உன்னாவ் சிறுமிக்கு ஆதரவாகப் பல குரல்கள் எழத்தொடங்கின. பாஜக எம்.எல்.ஏ-வை கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களுக்குப் பிறகு இந்த வழக்கை  அலஹாபாத் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ-வை இதுவரை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழும்பியது. உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பிறகு பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். பிறகு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது எம்.எல்.ஏ 7 நாள்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.