ஐ.பி.எல் போட்டியின்போது பாலியல் தொல்லை! - போலீஸில் புகார் அளித்த இளம்பெண்

ஐ.பி.எல் போட்டியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். 

பாலியல் தொல்லை

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடையிலான ஐ.பி.எல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. போட்டியின்போது மைதானத்தில் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் மும்பை போலீஸில் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் மும்பை வான்கடே மைதானத்தில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரை 2 நாள்கள் கஸ்டடியில் எடுத்தனர். அவர் குறித்த தகவல்களைப் போலீஸார் வெளியிடவில்லை. வான்கடே மைதானத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் ஸ்டேண்ட் அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

உலகின் பிரபலமான கிரிக்கெட் லீக் தொடரான ஐ.பி.எல் தொடரின்போது பாலியல் புகார்கள் எழுவது இது முதல்முறையல்ல. பிரபல தொழிலதிபரான நெஸ் வாடியா, தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2014-ல் போலீஸில் புகார் அளித்தார். மும்பை வான்கடே மைதானத்தில் 2014-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி நடைபெற்ற போட்டியின்போது நெஸ் வாடியா, தனது கையைப் பிடித்து இழுத்ததாக, ப்ரீத்தி ஜிந்தா புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!