`மால்களில் பார்க்கிங் கட்டணத்தை நெறிப்படுத்த வேண்டியது அரசின் கடமை!’ - நுகர்வோர் சங்கம்

மால்களில் படம் பாரக்க ஒரு தனிநபருக்கு 300 ரூபாய் வரையிலும் செலவாகிறது.

`மால்களில் பார்க்கிங் கட்டணத்தை நெறிப்படுத்த வேண்டியது அரசின் கடமை!’ - நுகர்வோர் சங்கம்

வாரம் முழுவதும் அலுவலகங்களில் உழைத்துக் களைத்த சாமானியர்கள், வார இறுதி நாள்களை திரையரங்கிலும் மால்களிலும் செலவிட்டு இளைப்பாறிக்கொள்வது வாடிக்கையான ஒன்று. இணையதளங்களில் திரைப்படங்களைத் திருட்டுத்தனமாகப் பார்க்கும் குற்றங்கள் அதிகரிப்பதாகச் சொல்லப்படும் இந்தக் காலத்திலும்கூட, வார இறுதிநாள்களில் தியேட்டர்களில் படம் பார்க்க டிக்கெட் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஆன்லைனில் புக் செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைப்பது சாத்தியப்படுகிறது.

தற்போதைய சூழலில், மால்களில் படம் பார்க்கச் செல்வது என்பதே பொதுமக்களுக்கு மிகவும் சிரமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால், டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்தால் டிக்கெட் விலையைவிட கூடுதலாக 30 ரூபாய் வரை  கட்டணம். குடிதண்ணீர் வாங்கினால் 50 ரூபாய். இதை எல்லாம்விட வண்டியை பார்க்கிங் செய்ய ஒரு மணி நேரத்துக்கு 30 ரூபாய் என பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பார்க்கிங்

ஒரு திரைப்படம், சராசரியாக இரண்டரை மணி நேரம் ஓடக்கூடியது. அதன்படி, மால்களில்  ஒரு திரைப்படம் பார்க்க பார்க்கிங்குக்காக  மட்டும் 120 ரூபாய் செலவாகிறது. தொடர்ச்சியாக பொதுமக்கள் பலராலும் மால்களின் மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு `பல பெரிய திரையரங்குகளிலும் மால்களிலும் குடிதண்ணீர் வைக்கப்படுவதில்லை. காசு கொடுத்து வாங்கிக் கொடுக்கும் மினரல் வாட்டர் மட்டுமே இருந்தது' என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டது. இதை எதிர்த்து பலரும் கருத்து தெரிவித்த பிறகு திரையரங்குகளில் குடிதண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டன. இப்போதும் பல மால்களில் அவை எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன எனத் தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு உள்ளன. இத்தனை இன்னல்களுக்கு மத்தியில் திரைப்படம் பார்க்கச் செல்லும் மக்களுக்கு மகிழ்ச்சிக்குப் பதில் மனவருத்தமே அதிகம் ஏற்படுகிறது. மால்களில் தனிநபர் ஒருவர் திரைப்படம் பார்க்க 300 ரூபாய் வரை செலவாகிறது என்பதே கசப்பான உண்மை. தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் நிலவுகையில் நமது அண்டை மாநிலமான தெலுங்கனாவில் ஆச்சர்யமளிக்கக்கூடிய  ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பார்க்கிங் கட்டணம்

`இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என தெலுங்கனா அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அரசாங்கம் வெளியிட்ட உத்தரவின்படி, `மால்களில் அரை மணி நேரம் வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், மால்களில் வாங்கிய பொருள்களின் பில்லைக் காட்டினால் பார்க்கிங் கட்டணம் தேவையில்லை. ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பார்க்கிங் கட்டணத்தைவிட அதிக ரூபாய்க்கு பொருள்கள் வாங்கியிருக்கும்பட்சத்தில்  அவர்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மால்களில் உள்ள அரங்குகளில் திரைப்படம் பார்த்தவர்கள் பட டிக்கெட்டைக் காட்டினால் போதுமானது. அவர்கள் பாரக்கிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை'. இதே போன்றதோர் அரசாணையை தமிழக அரசும் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது.

பார்க்கிங்

`டிசம்பர் 1-ம் தேதி முதல், எல்லா திரையரங்குகளிலும் பார்கிங் கட்டணம்  நெறிமுறைப்படுத்தப்படும்' என ஆணை வெளியிட்டது தமிழக அரசு. அதன்படி, `மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 20 ரூபாய், டூவீலர்களுக்கு 10 ரூபாய் பார்க்கிங் கட்டணமும், நகராட்சிகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், டூவீலர்களுக்கு 5 ரூபாயும், பஞ்சாயத்துகளில் முறையே கார்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், டூவீலர்களுக்கு 3 ரூபாயும், சைக்கிள்களுக்கு எந்தவித கட்டணமும் தேவையில்லை' என உத்தரவிட்டது. எத்தனை தியேட்டர்களில் இந்தக் கட்டண நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்பது திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஏற்கெனவே மால்களில், திரையரங்குகளில் உணவுப்பொருள்களின் விலை அதிகம் இருப்பதாக பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

``மால்களில் வசூலிக்கப்படும் இந்த பார்க்கிங்  கட்டணங்கள் நெறிமுறைப்படுத்தாதது, நுகர்வோருக்கு பாதிப்பளிக்கக்கூடிய ஒன்று'' என்கிறார் Consumers Association of India அமைப்பின் நிர்வாக மேலாளர் நிர்மலா தேசிகன்.

தெலங்கனா ``மால்களில் நிர்ணயிக்கப்படும் இந்த பார்க்கிங் கட்டணம் என்பது,  அரசாங்கத்தால் நெறிமுறைப் படுத்தவேண்டிய ஒன்று. மால்களின் உரிமையாளர்கள், தங்களின் வசதிக்கேற்ப பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். நுகர்வோர்களுக்கு பாதிப்பளிக்கக்கூடிய இதுபோன்ற வரைமுறையற்றக் கட்டணமுறையை அரசாங்கம்தான் நெறிபடுத்த வேண்டும். மால்களில் உள்ள திரையரங்குகளில் படம் பார்க்க வரும் பொதுமக்களிடம் முறையான பாரக்கிங் கட்டணம் வசூலிக்க, திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் பேசி வழி செய்ய வேண்டும். மால்களில் பார்க்கிங் கட்டணம் மட்டுமல்ல, உணவுப்பொருள்களும் M.R.P-யைவிட அதிகமாக சில கடைகளில் விற்கப்படுகிறது. தெலுங்கனாவில் செயல்படும் அரசு, மக்களுக்காகச் செயல்படுகிறது. நமது அரசு செயல்படவில்லை என்பதே உண்மை" என்றார் ஆதங்கத்துடன்.

சென்னை மால்களில் உள்ள தியேட்டர்களில் எவ்வளவு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்த முறையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.  இதுகுறித்த விவாதங்கள் அடிக்கடி நடைபெற்றாலும், இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!