வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (16/04/2018)

கடைசி தொடர்பு:09:24 (16/04/2018)

சிறப்பு அந்தஸ்து கோரும் ஆந்திரா - இன்று முழு அடைப்புப் போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

ஆந்திரா

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் ஆந்திர அரசு மத்திய அரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. தொடர்ந்து அக்கட்சியின் எம்.பி-க்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய பா.ஜ.க அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்தத் தீர்மானத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என ஆந்திராவின் பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளன. ஆனால், முழு அடைப்புப் போராட்டம் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எனக் கூறி முதல்வர் சந்திரபாபு நாயுடு இதை எதிர்த்துள்ளார். எதிர்க்கட்சிகள் அறிவித்தபடி இன்று அதிகாலை முதலே முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. இதனால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்தப் போராட்ட அறிவிப்பினால் ஆந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றிற்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.