கத்துவா சிறுமி உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் எதிர்ப்பு! 8 கி.மீ தூக்கிச்சென்ற அவலம்

கத்துவா சிறுமியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

கத்துவா சிறுமி உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் எதிர்ப்பு! 8 கி.மீ தூக்கிச்சென்ற அவலம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கத்துவா சிறுமியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சொந்த கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

கத்துவா சிறுமி

ஜம்மு- காஷ்மீரில் கத்துவா அருகேயுள்ள ரஸனா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த ஜனவரி 17- ம் தேதி உயிரற்ற சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஜனவரி 10-ம் தேதி காணாமல் போன சிறுமியை 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தால் இந்தியாவே அதிர்ந்து போய் கிடக்கிறது. இந்நிலையில், சிறுமியின் உடலை அடக்கம் செய்யும் போது நடந்த சம்பவம் ஒன்றை சிறுமியின் உறவினர்கள் தற்போது பகிர்ந்துள்ளனர். சிறுமியின் உடலை ரஸனா கிராமத்தில் அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். அன்று மாலை 6 மணியளவில் ரஸனா கிராமத்தையொட்டி தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த கிராம மக்கள் சிலர், 'இது தங்களுடைய நிலம் இங்கே புதைக்கக் கூடாது' என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  

சிறுமியின் பெற்றோர் இது தங்களுடைய நிலம் என்று கூறியும் பலனில்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்துக்குகூட இரக்கம் காட்ட யாரும் தயாராக இல்லை. தொடர்ந்து, சிறுமியின் உறவினர் ஒருவர் தன் இடத்தை அடக்கம் செய்யக் கொடுத்தார். ரஸனா கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமியின் தாத்தா கூறுகையில், ``சிறுமியின் சடலத்தைப் புதைக்க எவ்வளவு நிலம் தேவைப்பட்டுவிடும். சிறுமியின் சடலத்தைக் கையில் நாங்கள் ஏந்திக்கொண்டிருக்கும்போதுகூட மனிதாபிமானமற்ற முறையில் கிராம மக்கள் நடந்துகொண்டது எங்கள் துயரை மேலும் அதிகப்படுத்துகிறது'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!