வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (16/04/2018)

கடைசி தொடர்பு:14:57 (20/04/2018)

ஐ.பி.எல் தொடரில் மைதான பராமரிப்புக்குச் செலவாகும் தண்ணீர் எவ்வளவு? #VikatanData

ஒரு மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி ஒன்றுக்குச் சராசரியாக மைதான பராமரிப்புக்காக மட்டும் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறது எனில் இந்த ஐபிஎல் தொடரில் 60 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்குச் சராசரியாக 36 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகும்  என்று கணக்கிடப்படுகிறது.

ஐ.பி.எல் தொடரில் மைதான பராமரிப்புக்குச் செலவாகும் தண்ணீர் எவ்வளவு? #VikatanData

மும்பை வான்கடே மைதானத்தில் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியும், தொடக்க விழாவும் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது. மும்பை மாநகராட்சி மைதான பராமரிப்புக்காக கூடுதல் தண்ணீர் வழங்கமாட்டோம் என்று மைதானத்தின் தண்ணீர்ப் பயன்பாடு மீதான வழக்கு விசாரணையில் பதிலளித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பை நகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான வறட்சியினால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு அனைவரும் அவதிப்பட்டனர். மேலும், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அனைவரும் மிகுந்த சிரமம் அடைந்தனர். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் மும்பை, புனே, நாக்பூர் நகரில் மட்டும் 19 போட்டிகள் நடத்த கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்தன. அப்போது, "கிரிக்கெட் போட்டிக்கு பிட்ச் தயார் செய்ய அதிக அளவு தண்ணீர் வீணடிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பிட்ச் தயார் செய்யத் தினந்தோறும் 60,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் மைதானம் பராமரிப்புக்காக மட்டும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை செலவழிக்க நேரிடும். எனவே, போட்டிகளை ரத்து செய்ய வேண்டும்" என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதுவரை பயன்படுத்திய தண்ணீருக்கான வரியைச் செலுத்த ஐ.பி.எல் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

                             தண்ணீர்

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிரிக்கெட் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டது. எனவே, ஆட்டங்களை ரத்து செய்தால் பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் முக்கியம். தற்போது கடும் வறட்சியினால் மாநிலம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் அவசியமில்லை என்று கூறி, தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாத வேறு மாநிலத்துக்கு ஐ,பி.எல் போட்டிகளை மாற்றுமாறு பரிந்துரைத்தது. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், போட்டிகள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டதால் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிக்குத் தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில், இந்த முறையும் மும்பையில் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே, வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஓகா, ரியாஸ் சாக்லா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை மைதானத்தின் பராமரிப்புக்காக பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எஸ்.கண்டேபார்க்கர், வான்கடே மைதானம் அருகில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு, மழைநீர் சேகரிப்பு மூலம் சேமிக்கப்பட்டுள்ள நீரை மட்டுமே மைதான பராமரிப்புக்குப் பயன்படுத்தப்படும். மும்பை மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரோ அல்லது தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் தண்ணீரோ பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

                          

இதையடுத்து நீதிபதிகள் "அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின்போதும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுமா?" என்று கேட்டதற்கு, இதற்கு தற்போது உறுதியாகப் பதிலளிக்க முடியாது என்று பதிலளித்தார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

அடுத்தடுத்த விசாரணைகளின்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தைப் பராமரிக்க அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான கூடுதல் தண்ணீரை மாநகராட்சி சார்பில் வழங்கமாட்டோம். மேலும், கடந்த 3 வருடங்களாகவே வான்கடே மைதானத்துக்குக் கூடுதல் தண்ணீர் வழங்கப்படவில்லை என்று கூறினார். இதுதொடர்பாக அறிக்கையை மாநகராட்சி தாக்கல்செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இது தொடர்பான அறிக்கையை மகாராஷ்டிரா அரசு  சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

ஒரு மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி ஒன்றுக்குச் சராசரியாக பராமரிப்புக்காக மட்டும் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறது. எனில், இந்த ஐ.பி.எல் தொடரில் 60 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்குச் சராசரியாக 36 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகும்  என்று கணக்கிடப்படுகிறது. மக்களின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் இந்தத் தேசத்தில் ஒரு தனியார் கிரிக்கெட் தொடருக்கு இவ்வளவு தண்ணீர் செலவழிக்கப்படுவது சற்றே வருத்தமளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் தமிழகத்தில் இருந்து புனேவுக்கு மாற்றப்படலாம் என்றாலும் அங்கும் தண்ணீரே பிரதான பிரச்னையாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க