வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (16/04/2018)

கடைசி தொடர்பு:13:14 (16/04/2018)

காவிரி விவகாரம்! - அரசியல்வாதிகளை கடுமையாக சாடும் பிரகாஷ்ராஜ் #WeWantCMB

பிரகாஷ் ராஜ்

`ஒரு நதிநீரைக் குடித்து, விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக்கொள்வது முறையல்ல’ எனக் காவிரி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியத்தை அமைத்திடக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் காவிரி விவகாரம் குறித்து பிரகாஷ்ராஜ் கடிதம் ஒன்றை எழுதி, தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார். 

பிரகாஷ்ராஜ்
 

அந்தக் கடிதத்தில்,  `அரசியல்வாதிகளின் சுயநல எண்ணம்தான் இத்தனை ஆண்டுகாலமாகக் காவிரிப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணம். இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், காவிரி நதிநீரை நம்பியிருக்கும் சூழலில் அரசியல் தலைவர்கள் சண்டை போடுவதில் காட்டிய அக்கறையைத் தீர்வு தேடுவதில் காட்டவில்லை. உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களைப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசும் நீர்வளத்துறை அறிஞர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய நடுநிலையான தீர்வுக்கு, வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் கருத்து சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வெளியானால் இரண்டு மாநிலங்களிலும் பேருந்துகள் ஓடாது, கடைகளைத் திறக்க முடியாது; கல்வி நிறுவனங்கள் மூடப்படும், மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கிப் போவார்கள். இந்தச் செயல்களுக்கும் காவிரிப் பிரச்னை தீர்வதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா. காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அரசியல்வாதிகள் அதில்தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் எடுக்கும் மாஃபியாக்களுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடுவதில்லை.

ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக்கொள்வது முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறு அல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள் எல்லாம் தானாகச் சரியாகும்’ என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க