வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (16/04/2018)

கடைசி தொடர்பு:16:17 (16/04/2018)

`காஷ்மீர் சிறுமியின் குடும்பம் மற்றும் வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு!’ - உச்ச நீதிமன்றம் உத்தரவு

'காஷ்மீர் சிறுமியின் குடும்பம் மற்றும் அவரது வழக்கறிஞர் தீபிகா ஆகியோருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, ஜனவரி மாதம் கடத்தப்பட்டு மயக்க மருந்து கொடுத்த 8 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். ஓய்வு ஆசிரியர், அவரது மகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என 8 பேரின் கொடூரச் செயலுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ள இவ்வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், சிறுமியின் தரப்பில், வழக்கறிஞர் தீபக் சிங் ராஜவாட் வாதாடுகிறார். இந்த வழக்கில், 8 பேரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கை, காஷ்மீரிலிருந்து சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், 'சிறுமியின் குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதேபோல, 'சிறுமியின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கை சண்டிகருக்கு மாற்றுவது தொடர்பாக 27-ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க