தொடர்ந்து 8-வது நாளாக பங்குச்சந்தை உயர்ந்தது 

பலவீனமான துவக்கத்திற்குப் பின் ஒரு கட்டத்தில் மிகவும் கீழிறங்கிய நிலையில் இருந்த இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளாக சென்செக்ஸும், நிஃப்ட்டியும் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்று லாபத்தில் முடிவடைந்தன. 

ஒரு கட்டத்தில் சுமார் 300 புள்ளிகள் சரிந்து 33,899.34 என்ற நிலையை அடைந்திருந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று இறுதியில் 112.78 புள்ளிகள் அதாவது 0.33 சதவிகிதம் லாபத்துடன் 34,305.43 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 47.755 புள்ளிகள், அதாவது 0.46 சதவிகிதம் உயர்ந்து 10,528.35-ல் முடிவுற்றது.

சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களுக்குப் பின் புவி அரசியலில் ஏற்பட்டிருக்கும் கலக்கத்தினால் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இன்று பெரும்பாலும் தொய்வடைந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையிலும் முதலீட்டாளர்கள் மனநிலை வெகுநேரம் தொய்வுடனே இருந்ததது.

இருப்பினும் உணவுப் பண்டங்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்தியாவின் மொத்த பணவீக்கம் (Wholesale Price Inflation) கடந்த மார்ச் மாதத்தில் 2.47 சதவிகிதமாக இறங்கியது என்று வந்த அறிக்கை ஓரளவு முதலீட்டாளர்களை பங்குகளை வாங்குவதற்கான ஆர்வத்தைத் தூண்டியது எனலாம். இதன் காரணமாக பங்குகளின் விலைகள் வர்த்தக நேர இறுதியில் சற்று உயர்ந்தன.

மேலும் சென்ற வாரம் வெளியான அறிக்கைகள் படி காய்கறிகள் உட்பட்ட உணவுப் பொருள்களின் விலையிறக்கத்தால், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் (Consumer Price Index கடந்த மார்ச் மாதத்தில் 4.28 சதவிகிதமாக குறைந்ததும், இந்தியாவின் தொழில் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக 7.1 சதவிகிதம் வளர்ந்ததும் சந்தைக்கு ஓரளவு சப்போர்ட்டாக இருந்ததென கூறலாம்.

தவிர, இந்த வருடத்திய தென் மேற்கு பருவ மழை 100 சதவிகிதம் நார்மலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களின் மன நிலை ஓரளவு உற்சாகமாக இருந்ததற்கு ஒரு காரணம்.

தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோஸிஸ் தன்னுடைய ஜ்னவரி - மார்ச் 2018 காலாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டது. நிறுவனத்தின் வருமானம் ஓரளவு எதிர்பார்த்த விதத்தில் இருந்தாலும் தற்போதைய ஆண்டில் டிஜிட்டல் பிசினெஸ், தகவல் மையங்கள் திறக்கப்பட வேண்டிய அவசியம் மற்றும் பணியாளர்களின் திறமையை வளர்ப்பதற்கான முனைப்பு இவற்றிற்கு தேவைப்படும் முதலீடு காரணமாக நிறுவனத்தின் ரெவெனுக்கே மார்ஜின் குறைவாக இருக்கும் என்று அறிவித்திருப்பது அப்பங்கை இன்று காலை ஆறு சதவிகிதம் சரியச்செய்தது. இருப்பினும், அப்பங்கு ஓரளவு சுதாரித்து இறுதியில் 3 சதவிகித நஷ்டத்துடன் இன்று முடிவுற்றது.

மருத்துவம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் இன்று நல்ல முன்னேற்றம் கண்டன. மெட்டல், ஆயில் மற்றும் டெலிகாம் பங்குகள் பெரும்பாலும் மந்தமாக காணப்பட்டன. வங்கி, கேப்பிடல் கூட்ஸ், எப்.எம்.சி.ஜி, ஆட்டோமொபைல் மற்றும் பவர் துறைகளில் சில பங்குகள் நன்கு முன்னேறின.

இன்று விலை குறைந்த பங்குகள் :

டாடா மோட்டார்ஸ் 4.7%
இன்ஃபோஸிஸ் 3.1%
விப்ரோ 1.6%
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் 2.7%
பாரத் எலக்ட்ரானிக்ஸ் 2.1%
பஞ்சாப் நேஷனல் பேங்க் 2.1%

விலை உயர்ந்த பங்குகள் :

சிப்லா 5.3%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 2.9%
ஹீரோ மோட்டோகார்ப் 2.2%
யூ.பி.எல் 2.1%
என்.டி.பி.சி 2.1%
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் 2.1%
கோடக் பேங்க் 2%
பஜாஜ் ஆட்டோ 1.8%
மஹிந்திரா & மஹிந்திரா 1.8%
பஜாஜ் பைனான்ஸ் 1.8%

இன்று மும்பை பங்குச்சந்தையில் 1253 பங்குகள் விலை உயர்ந்தும், 1416 பங்குகள் விலை குறைந்தும், 207 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!