வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (17/04/2018)

கடைசி தொடர்பு:10:01 (17/04/2018)

ஜனார்த்தன் ரெட்டி சகோதரருக்கு பா.ஜ.க-வில் எம்.எல்.ஏ., சீட்..! கர்நாடகாவில் சர்ச்சை

சுரங்க ஊழலில் சிறைக்குச் சென்ற ஜனார்த்தன் ரெட்டியின் தம்பி சோமசேகர ரெட்டி, பா.ஜ.க-வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இது, கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில், மே 12-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. காங்கிரஸ், ஏற்கெனவே 218 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 72 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரண்டாம் கட்டமாக 82 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது.

அதில், சுரங்க ஊழலில் சிறைக்குச் சென்ற ஜனார்த்தன் ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டியின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவருக்கு பெல்லாரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை பி.எஸ்.எடியூரப்பா முதல்வராக இருந்த காலத்தில், அமைச்சரவையில் இருந்தவர் ஜனார்த்தன் ரெட்டி. அவர்மீது, சுரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால், கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சுமார், மூன்று ஆண்டுகள் சிறையிலிருந்த அவர், தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டிருந்தபோது, சுமார் 500 கோடி ரூபாய் செலவுசெய்து, அவருடைய மகள் திருமணத்தை நடத்திவைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். தற்போது, அவரது தம்பி சோமசேகர ரெட்டிக்கு சீட் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேலி செய்யும் விதத்தில் ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, 'எடியூரப்பாவின் அரசு ஊழல் அரசு என்று அமித்ஷா கூறியது தற்போது உண்மையாகியுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.