வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (17/04/2018)

கடைசி தொடர்பு:14:41 (17/04/2018)

`எந்த ஏ.டி.எம்-களிலும் பணம் இல்லை' - அவதிப்படும் 6 மாநில மக்கள்

வட மாநிலங்களில் உள்ள பல ஏ.டி.எம்-களில் பணப்பற்றாக்குறை நிலவுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஏ.டி.எம்

இந்தியாவின் டெல்லி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பல பேர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாள்களுக்கும் மேலாக ஏ.டி.எம்-களில் பணம் இல்லை. இதனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இருந்த சூழல் மீண்டும் நிலவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.  இந்நிலையில், பங்குச் சந்தை மதிப்புகளைப் பெற மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கியுடன் ஒரு ஆலோசனை நடத்தியுள்ளது. அதில் பணப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

‘Business  Standard’ ஆங்கிலப்பத்திரிகை நடத்திய ஆய்வில் கடந்த சிலமாதங்களாக ஆந்திரா, பீகார், கர்நாடகா, மஹாராஸ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா போன்ற இடங்களில் வங்கிகளில் போடப்படும் பணத்தைவிட ஏ.டி.எம்-களில் இருந்தும் வங்கிகளில் இருந்தும் எடுக்கப்படும் பணமதிப்பு அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதித்துறை அதிகாரி, `` நாங்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். நிறைய மாநிலங்களில் பணப் பற்றாக்குறை இல்லை. பீகார் மற்றும் மணிப்பூர் போன்ற இடங்களில் மட்டுமே இந்தப் பிரச்னை நிலவுகிறது. ஏ.டி.எம்-களில் பணப் பற்றாகுறையை சரிசெய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.