வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (17/04/2018)

கடைசி தொடர்பு:17:04 (17/04/2018)

`பணத்துக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்?’ - ஜெட்லியின் அடடே விளக்கம்

வடமாநிலங்களில் நிலவிவரும் பண பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி

இந்தியாவின் டெல்லி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பணமதிப்பிழப்புக்குப் பின்னர், புதிதாக வெளியிடப்பட்ட 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றாவாறு ஏ.டி.எம் இயந்திரங்கள் பல இடங்களில் மாற்றியமைக்கப்படவில்லை. இதுவும் பண பற்றாக்குறைக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, “வழக்கத்துக்கு மாறாகப் பணத் தேவை அதிகரித்துள்ளதால் ஏ.டி.எம்-களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ சார்பில் குழுக்கள் அமைத்து பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பண பற்றாக்குறை குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய நிதியமைச்சகச் செயலாளர் சுபாஷ் கர்க், “நாங்கள் ஒரு நாளுக்கு 500 கோடி ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிறோம். தற்போது அதை 5 மடங்காக அதிகரிக்க உள்ளோம். இன்னும் ஓரிரு நாள்களில் சுமார் 2,500 கோடி ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகளை ஒரே நாளில் அச்சிட உள்ளோம். அதன் பின் 70,000 கோடி முதல் 75,000 கோடி வரையிலான ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட இருக்கிறோம்” எனக் கூறினார்.