``இப்போதேனும் பேசுங்கள்...நாட்டைக் காப்பாற்றுங்கள்!” - பிரதமர் மோடிக்கு யஷ்வந்த் சின்ஹா கடிதம் | Yashwant sinha writes an open letter to prime minister narendra modi to speak up

வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (18/04/2018)

கடைசி தொடர்பு:10:08 (18/04/2018)

``இப்போதேனும் பேசுங்கள்...நாட்டைக் காப்பாற்றுங்கள்!” - பிரதமர் மோடிக்கு யஷ்வந்த் சின்ஹா கடிதம்

``இப்போதேனும் பேசுங்கள்...நாட்டைக் காப்பாற்றுங்கள்!” - பிரதமர் மோடிக்கு யஷ்வந்த் சின்ஹா கடிதம்

அன்பு நண்பரே,

2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியடைந்து நரேந்திர மோடி ஆகிய உங்கள் தலைமையில் ஆட்சி அமைத்தது. அந்த வெற்றிக்குப் பின்னணியில் நம்மில் பலருடைய கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பு வெறும் தேர்தல் சமயத்தில் மட்டும் நிகழ்ந்தது அல்ல. 2004-ம் வருடத்திலிருந்தே நம்மில் சிலர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் வேறு சிலரோ வெறுமனே தங்களின் மாநிலங்களில் அமர்ந்துகொண்டு அதற்கான பலனை அனுபவித்து வந்தார்கள்.

யஷ்வந்த் சின்ஹா

பி.ஜே.பி-க்கு 2014-ல் கிடைத்த எதிர்பாராத வெற்றி நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய அத்தியாயத்தை எழுதுவதாக அமைந்தது. நாங்களும் நரேந்திர மோடியாகிய உங்கள் தலைமையிலான அமைச்சரவைக்கு முழு நம்பிக்கையுடன் பக்கபலமாக இருந்தோம். நாங்கள் நம்பிய உங்கள் அமைச்சரவை தற்போது நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஐந்து பட்ஜெட்டுகளை மத்திய அரசு தாக்கல் செய்து, தனக்கு கிடைத்த சாத்தியக்கூறுகளை முழுவதுமாக உபயோகித்துள்ளது. ஆனால், இறுதியில் தான் பயணிக்க வேண்டிய பாதையை இந்த அரசு தொலைத்திருக்கிறது. கூடவே வாக்காளர்களின் நம்பகத்தன்மையையும் இழந்திருக்கிறது.

பொருளாதார ரீதியாக அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தேசமாக இந்தியாவை நமது அரசு முன்னிறுத்துகிறது. ஆனால், உண்மையில் நாட்டின் சூழல் மிகவும் இருண்டுள்ளது. வளர்ந்து வரும் நாட்டில் விவசாயிகள் கடுந்துன்பத்தில் இருக்க மாட்டார்கள்; இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்க மாட்டார்கள். சிறுதொழில்கள் அழிக்கப்படுவதில்லை. முதலீடுகளும், சேமிப்புகளும் இமாலயச் சரிவுகளைச் சந்திப்பதில்லை. இன்னும் மோசமாகச் சொல்வதென்றால் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாட்டில் வங்கி ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியே எட்டிப்பார்ப்பதில்லை. அப்படி ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல், அரசின் கண்முன்பே வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதில்லை. 

பெண்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பற்று இருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வுகள் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களை மன்னித்துக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் நம்மைச் சேர்ந்தவர்களே இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபடுகிறார்கள். சிறுபான்மையினர்கள் அந்நியர்களாகத் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள்தான், பெரும்பாலான வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் அரசியல் சாசனத்தில் அவர்களுக்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்த சட்டங்கள் அத்தனையும் கேள்விக்குறியாகி இருக்கின்றன.

நரேந்திர மோடி

நமது அரசின் வெளியுறவுக் கொள்கைகள் எல்லாம் பிரதமரின் அன்றாட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அந்த நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் கட்டிப்பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்தல் என்பதோடு சுருங்கிவிட்டது. ஆனால், இந்த வெளியுறவுக் கொள்கை அண்டை நாடான சீனா வரைக்கும் கூடப் பலன் அளிக்கவில்லை. பாகிஸ்தான் இன்னமும் தன் தீவிரவாதத்தை நமது நாட்டுக்கு மூட்டைகட்டி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்த நாம் ஏதும் செய்யமுடியாமல் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டும் இருக்கிறோம். இதனால், காஷ்மீர் இன்னமும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இடதுசாரித் தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் வளர்ந்து நிற்கிறது. இவை, அத்தனையாலும் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்டமைப்பும் முற்றிலுமாகச் சிதைந்திருக்கிறது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் சிலர், தங்களுக்குப் பேசுவதற்கான வாய்ப்பே தரப்படாததைச் சுட்டிக்காட்டி அங்கலாய்க்கிறார்கள். கட்சியின் மற்றக் கூட்டங்களிலும் இதே நிலைதான். நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரலைக் கேட்க பிரதமருக்கு நேரம் இருப்பதில்லை. கட்சித் தலைமையகம் கார்ப்பரேட் அலுவலகமாக மாறியிருக்கிறது. கார்ப்பரேட் அலுவலகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் பிரதமரைச் சந்திப்பது, அவர்களுக்குச் சாத்தியமற்றதாக இருக்கிறது. 

இவை எல்லாவற்றையும்விட, மாபெரும் அச்சுறுத்தல் நமது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் சர்க்கஸ் கூடாரம் ஆகிவிட்டது. அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் தாமதமானபோது, பிரதமராகிய நீங்கள் ஒருமுறைகூட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அமர்ந்து பேசுவதற்கு முன்வரவில்லை. இதனை நான் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அவர் தலைமையிலான அரசு, எதிர்க்கட்சிகளுக்குத் தேவையான இடத்தை அளித்தது. அது நாடாளுமன்றம் இயங்க ஏதுவாக அமைந்தது. நீங்களோ, உண்ணாவிரதம் இருந்தீர்கள்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்குபேர் அண்மையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது, நமது ஜனநாயக வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத திருப்பம். நீதித்துறை எந்த அளவுக்கு அழுகி விட்டிருக்கிறது என்பதற்கு 'ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருக்கிறது' என அவர்கள் திரும்பத் திரும்பக் கூறிய அந்த ஒற்றை வரிதான் சாட்சி.

மற்றொருபக்கம் சமூக வலைதளங்கள் மற்றும் இதர ஊடகங்கள் வழியாகத் தவறான முறையில் நமது தேர்தல் வெற்றிகளை உறுதி செய்துகொண்டிருக்கிறோம். அடுத்த மக்களவைத் தேர்தலில் உங்களில் எத்தனை பேருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், தற்போது நிலவும் சூழலை ஆராய்ந்தால் உங்களில் பாதிப்பேருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் வெற்றிவாய்ப்பு மிகமிகக் குறைவு. கடந்த மக்களவைத் தேர்தலில் நமது கட்சி வெறும் 31 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றிருந்தது, ஒருவேளை எதிர்த்தரப்பினர் அத்தனை பேரும் இம்முறை ஒன்றிணைந்தால் அந்த 31 சதவிகித வாக்குகளின் நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தனையில் நிறுத்துங்கள். நாம் காணாமல் போய்விடுவோம்.

தங்களது சமூகம் ஏமாற்றப்பட்டிருப்பதாக இதுவரை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் தாங்கள் மௌனம் காக்காமல் மனம் திறந்து பேச வேண்டும். பிரச்னைகள் கூட்டாகச் சேருவதற்கு முன்பு உங்களது கருத்தைக் கூறியே ஆக வேண்டும். இப்போது, நீங்கள் அமைதி காப்பது நமது நாட்டுக்கு இழைக்கும் அநீதி. எதிர்காலம் நம்மை மன்னிக்காது. நண்பரே, தனி நபரின் நலனைவிட கட்சியின் நலன் முக்கியமானது. கட்சியின் நலனைவிட நாட்டின் நலன் முக்கியமானது. 

நிச்சயம் இந்த ஆட்சியால் சிறிய சிறிய முன்னேற்றங்கள் கிடைத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் இந்த முன்னேற்றங்களையும் உங்களது ஆட்சி ஏற்படுத்தியுள்ள பெரும் சரிவுகள் மறைத்து விட்டிருக்கின்றன. எனது இந்தக் கடிதத்தின் வழியாக இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். உங்களது வலிமையைத் திரட்டி மனம் திறந்து பேசுங்கள். ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்றுங்கள். 

- நட்புடன்,

யஷ்வந்த் சின்ஹா,

உறுப்பினர் - பாரதிய ஜனதா கட்சி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர்.  

 

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்