ஹனுமன் வாசலில் அனுமதி மறுப்பு... பாலாஜி கோயிலில் ராஜமரியாதை!

ஹனுமன் வாசலில் அனுமதி மறுப்பு... பாலாஜி கோயிலில் ராஜமரியாதை!

ஹைதராபாத்தில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரை தலையில் சுமந்தவாரே, பூசாரி ஒருவர் கோயிலுக்குள் அழைத்துச் சென்ற சம்பவம், பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தலித் பக்ததை தலையில் சுமந்த பூசாரி

ஹைதராபாத் சில்குர் பாலாஜி கோயிலில் தலைமைப் பூசாரியாக சி.எஸ். ரங்கராஜன் என்பவர் பணியாற்றுகிறார். கடந்த திங்கள்கிழமை, இந்தக் கோயிலில் முனி வாகன சேவை நடைபெற்றது.  பூசாரி ரங்கநாதன், பட்டியல் இனத்தைச் சேர்ந்த பக்தரான ஆதித்யா பன்சாரி என்பவரை தன் தோளில் சுமந்தவாரே கோயிலுக்குள் அழைத்துச்சென்று வழிபடவைத்தார். கோயிலில் அவருக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது. இதுகுறித்து ரங்கநாதன் கூறுகையில், ''சனாதன தர்மத்தின்படி, இந்தச் சமூகத்தில் அனைத்து மக்களும் சமமானவர்கள். சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இதை நான் செய்தேன்'' என்கிறார். 

பாலாஜி கோயில் பூசாரி மற்றும் பக்தர்களின் செய்கையால் நெகிழ்ந்துபோன ஆதித்யா பன்சாரி , ''பட்டியல் இனம் என்பதால், இந்தச் சமூகத்தில் நான் பலவிதங்களில் அவமதிக்கப்பட்டேன். எனது சொந்த ஊரான மெகபூப்  நகரில்,  ஹனுமன் கோயிலுக்குச் சென்றபோது,  சாதியைக் காரணம் காட்டி, என்னை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். நான், வழிபடாமல் வேதனையுடன் வீடு திரும்பினேன்.  இப்போதும்  பல கோயில்களில் பட்டியல் இன மக்களை உள்ளே அனுமதிக்க மறுக்கும் வழக்கம் இருக்கிறது. மக்கள், மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்து மக்களும் சமமானவர்கள் என்கிற மனநிலை உருவாக வேண்டும்'' என்று மகிழ்வுடன் தெரிவித்தார். 

நாட்டில், பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில், பாலாஜி கோயில் நிர்வாகத்தின் செயல், மக்களிடையே பாராட்டைப்  பெற்றுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!