வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (18/04/2018)

கடைசி தொடர்பு:14:00 (18/04/2018)

“சுதந்திரத்துக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் வெட்கக்கேடானது” - கத்துவா சிறுமி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஆவேசம்

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவது வெட்கக்கேடான விஷயம் எனக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்னோ தேவி பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காஷ்மீர் முதல்வர் மெஹ்போபா முஃப்தி உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவது வெட்கக்கேடானது. நாம் எந்த மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். இனி எந்த ஒரு சிறுமிக்கோ பெண்ணுக்கோ இப்படி ஒரு நிகழ்வு நடக்காது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும், “டெல்லியைச் சேர்ந்த மனிகா பத்ரா, மணிப்பூரை சேர்ந்த மேரி கோம், மீராபாய் சானு, சங்கீதா சானு, ஹரியானாவைச் சேர்ந்த மனு பாகர் மற்றும் வினேஷ் போகத், தெலங்கானாவைச் சேர்ந்த சாய்னா நேவால், பஞ்சாபைச் சேர்ந்த ஹீனா சிந்து ஆகிய இந்தியாவின் மகள்கள் காமல்வெல்த் தொடரில் பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்கு கௌரவம் சேர்த்துள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

இவரைத் தொடர்ந்து கத்துவா விவகாரம் குறித்து பேசிய காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்போபா, “மாதா வைஷ்னோ தேவியின் வெளிப்பாடாக இருக்கும் ஒரு சிறு பெண்ணுக்கு இவ்வளவு கொடூரமான சம்பவம் எப்படி நிகழ்ந்தது. சமுதாயத்தில் ஏதோ தவறு இருக்கிறது” எனக் கூறினார்.