ஒன்பது நாட்கள் தொடர் முன்னேற்றத்துக்குப் பின் தொய்வு   | Share market for the day at close 18042018

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (18/04/2018)

கடைசி தொடர்பு:19:34 (18/04/2018)

ஒன்பது நாட்கள் தொடர் முன்னேற்றத்துக்குப் பின் தொய்வு  

தொடர்ந்து ஒன்பது தினங்கள் ஏறுமுகம் கண்ட இந்திய பங்குச்சந்தை இன்று தொடக்கத்தில் சற்று தடுமாறிய பின் மதியத்துக்கு மேல்  நல்ல ஒரு முன்னேற்றத்தைக் கண்டாலும், முதலீட்டாளர்கள் பல கவுண்டர்களில் லாபங்களை புக் செய்ததால்  கடைசி ஒரு மணி நேரத்தில் சரிந்து நஷ்டத்தில் முடிந்தது.

ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் உயர்ந்திருந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 63.38 புள்ளிகள் அதாவது 0.18 சதவிகிதம் நஷ்டத்துடன் 34,331.68 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 22.50 புள்ளிகள், அதாவது 0.21 சதவிகிதம் சரிந்து 10,526.20-ல் முடிவுற்றது.

சில பெரிய நிறுவங்கங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் சிறப்பாக அமைந்ததினாலும், ஹவுசிங் மற்றும் தொழில் துறை உற்பத்தி பற்றிய அறிக்கைகள் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்ததாலும் நேற்று அமெரிக்க பங்குச்சந்தை நல்ல முன்னேற்றம் கண்டது.

சீன நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டின் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரிசர்வ் விகிதத்தை சற்று தளர்த்தியதாலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் டென்ஷன் ஓரளவு தணிந்திருப்பதினாலும் ஆசிய சந்தைகள் பெரும்பாலும் முன்னேறின.

இருப்பினும், தொடர்ந்து ஒன்பது தினங்கள் பங்குகள் விலை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மனநிலை சற்று பாதுகாப்பு உணர்வுடன் இருந்தது. இதனால் அவர்கள் லாபங்களை உறுதி செய்ய பங்குகளை விற்பனை செய்ய தலைப்பட்டனர் என்று கூறலாம்.

சமீபத்திய பொருளாதார அறிக்கைகள் உற்சாகமூட்டக்கூடியதாக அமைந்ததாலும், தென் மேற்கு பருவ மழை நார்மலாக இருக்கும் என்ற இந்திய வானிலை மையத்தின் கணிப்பாலும் ஒரு பெரிய அளவிலான சரிவை இன்று சந்தை சந்திக்கவில்லை.

மேலும், அமெரிக்க டாலருக்கெதிராக ஏழு மாதத்திய லோ-ஆக 65.79 என்று ஒரு கட்டத்தில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு பின்னர் உயர்ந்து டாலருக்கு 65.60 என ரெகவர் ஆனதும் சந்தை பெருமளவு சரியாமல் இருக்க உதவியது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஐ.டி.சி  3.3%
விப்ரோ 2.9%
அல்ட்ராடெக் சிமெண்ட் 2.3%
ஜீ டெலி 2.2%
கெயில் இந்தியா 2%
ஹின்டால்க்கோ 1.9%
டாடா ஸ்டீல் 1.4%
வேதாந்தா, என்.டி.பி.சி, பார்தி ஏர்டெல், சிப்லா 1% - 1.2%
 
விலை இறங்கிய பங்குகள் :

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 3%
பாரத் பெட்ரோலியம் 1.3%
இந்தியன் ஆயில் கார்பொரேஷன் 1.2%
ஆக்ஸிஸ் பேங்க் 2.7%
டைட்டன் 1.9%
லூப்பின் 1.7%
டெக் மஹிந்திரா 1.5%
மஹிந்திரா & மஹிந்திரா 1.3%
 
இன்று மும்பை பங்குச்சந்தையில் 1131 பங்குகள் விலை உயர்ந்தும், 1527 பங்குகள் விலை குறைந்தும், 151 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.