வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (19/04/2018)

கடைசி தொடர்பு:15:27 (19/04/2018)

நீட் தேர்வின் ஆடை கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?

மருத்துவ படிப்புக்கான இந்த வருட நீட் தேர்வின் ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சி.பி.எஸ்.இ.

நீட்

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகியவற்றைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை, நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தற்போது அதற்காக ஆடை கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. அவர்கள் தெரிவித்துள்ள கட்டுப்பாடுகள், வெளிர் நிறத்திலான ஆடைகளை அணிய வேண்டும். அரைக் கை சட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஷூ அணியக் கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது. பெரிய பொத்தான்களைக் கொண்ட சட்டைகளை அணியக் கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண செருப்புகளையே அணிய வேண்டும். தொலைத்தொடர்பு சாதனங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் உலோகப் பொருள்கள் ஆகியவற்றையும் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நீட் ஆடை கட்டுப்பாடுகள் கடந்த வருடம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. துப்பட்டா அணியக் கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது, பாக்கெட் வைத்த சட்டை போடக் கூடாது எனப் பல கட்டுப்பாடுகளை விதித்தது சி.பி.எஸ்.இ. மேலும், டார்ச் அடித்து காது முதல் உள்ளாடை வரை எனத் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்ட பின்னரே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளின் உள்ளாடைகளைச் சோதனை செய்த சம்பவம் கடந்த வருடம் மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.