வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (19/04/2018)

கடைசி தொடர்பு:14:30 (19/04/2018)

'உடனடியாக ‘லோக் ஆயுக்தா’ அமையுங்கள்'- தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிம்ன்றம்

அனைத்து மாநிலங்களிலும் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல்களைக் கண்டறிந்து விசாரிக்க, கடந்த 2013-ம் ஆண்டு, ‘லோக் ஆயுக்தா’ மற்றும் ‘லோக்பால்’ சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக எந்த ஒரு தனி மனிதனும் வழக்குத் தொடர முடியும். இதன் விசாரணையில், அரசியல்வாதிகளோ அல்லது அரசு அதிகாரிகளின் ஊழலோ நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குப் பதவி பறிப்பு, சம்பள நிறுத்தம், பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.  

இந்தச் சட்டம், முதல்முதலாக மகாராஷ்டிராவில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 15 மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்தது. தற்போது தமிழகம், தெலங்கானா, புதுவை, அருணாசலப்பிரதேசம், திரிபுரா ஆகிய 12 மாநிலங்களில் இன்னும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டு, இன்னும் ‘லோக் ஆயுக்தா’ அமைக்காததற்கான காரணம்குறித்து அனைத்து மாநிலங்களும் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்னதாக தெரிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்துக்கான மனுவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா தொடங்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கைகுறித்து, வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.