வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (19/04/2018)

கடைசி தொடர்பு:15:00 (19/04/2018)

கோவா முதல்வர் பாரிக்கர் குறித்து வதந்தி பரப்பிய வாலிபர் சிக்கினார்!

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின், உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்தி பரப்பியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மனோகர் பாரிக்கர்

வயிற்று வலி மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த பிப்ரவரி 15-ம் தேதி கோவாவிலுள்ள மருத்துவமனையில் முதல்வர் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக, மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பிய அவர், அம்மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு சுறுசுறுப்பாக செயலாற்றி வந்தார். 

சில நாள் கடந்தபின், மீண்டும் பாரிக்கரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கணைய புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா செல்ல அறிவுறுத்தினர். அதன்பேரில், கடந்த மார்ச் மாதம் அங்குச் சென்றார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவாவைச் சேர்ந்த கென்னத் சில்வேரா என்பவர், ஃபேஸ்புக்கில் 'தற்போதுதான் செய்தி அறிந்தேன், பாரிக்கர் உயிருடன் இல்லை' எனப் பதிவிட்டுள்ளார். இவரின், இந்தப் பதிவு கண் இமைக்கும் நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதை அறிந்த, சைபர் கிரைம் பிரிவு போலீஸார், துரிதமாகச் செயல்பட்டு கென்னத் சில்வேராவைக் கைது செய்தனர். முன்னதாக, பாரிக்கர் நலமாக உள்ளதாக அவரின் தனிப்பட்ட செயலாளர் ரூபஷ் காமட் கூறினார்.