`ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்!' - நீதிபதி லோயா விவகாரத்தில் சீறிய யோகி | rahul gandhi should apologies to the people says yogi adityanath

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (19/04/2018)

கடைசி தொடர்பு:16:15 (19/04/2018)

`ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்!' - நீதிபதி லோயா விவகாரத்தில் சீறிய யோகி

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை, இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. `இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்' எனக் கொதித்திருக்கிறார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அமித் ஷா

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்த காலத்தில், சொராபுதீன் சேக் போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா, நண்பர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நீதிபதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ், சி.பி.எம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. `நீதிபதி மரணத்தில் நீதி விசாரணை தேவை' என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தும் முறையிட்டார் ராகுல் காந்தி. இந்நிலையில், லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதியரசர்கள் அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது. 

யோகி ஆதித்யநாத்

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், `நீதிபதி லோயா வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம், காங்கிரஸின் நிலைப்பாடு மீண்டும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக, மக்களிடம் எதிர்மறை உணர்ச்சிகளை வளர்க்கும் விதமாகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக, நாட்டு மக்களிடம் ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்றார்.